19.3.15

தென்னாப்பிரிக்காவில் காந்தி

இந்தியர்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும்/மதிக்கும் மனிதர்களை, புனிதர்களாக உயர்த்தி அவர்களைச் சுற்றி ஒரு புனித பிம்பத்தைக் கட்டியமைத்துவிட்டு, உண்மையை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ திரைபோட்டு மறைத்துவிடுவார்கள். உண்மை யாருக்கும் வேண்டியதில்லை. அதனால் பைசா உபயோகமும் கிடையாது. ஆனால், கட்டி எழுப்பப்பட்ட புகழ் மயக்கங்களோ இனிமையைத் தரும்.
காந்தி, நேதாஜி, நேரு, அம்பேத்கர், பெரியார் என்று அத்தனைத் தலைவர்களையும் சுற்றியும் நம்மூரில் எத்தனை மாயக்கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஒரே ஒரு நிமிடம் மேலே கூறியவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தாலும் இத்தகைய பாதிப் போலியான புகழுரைகள்தான் உடனே நினைவுக்கு வருகின்றன.
ஒரு தலைவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் இத்தகைய கேலிக்கூத்துகள் அதிகமாகவே நடக்கும். அவர்களாகவே எழுதிய சுயசரிதைகளும் சில விடுபடல்களோடேயே இருக்கும். முதன்மைச் சீடர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறுகளோ மிகையான புகழுரைகளாக இருக்கும். சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் எழுதும் வாழ்க்கை வரலாறுகளோ முதன்மைச் சீடர்களின் புகழுரைகளுடன், அவர்களது இடைச்செருகல்களும் அதிகமாக இருக்கும். உண்மையான வாழ்க்கை வரலாறுகள் அரிதானவையே.
காந்தியின் சுயசரிதையும் கூட இத்தகைய விடுபடுதல்கள் உடையதே என்பது என் முடிவு. தென்னாப்பிரிக்காவில் ரயிலில் அவருக்கு நிகழ்ந்த இனவாதத் தாக்குதல் பற்றி எழுதியவர். அதே பாதையில் அவர் திரும்பியபோது என்ன நடந்தது என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாரா? ஆனால், நமக்கு முழுமையை நோக்கிய பார்வையில் அக்கறை இல்லை. மூளை அதிர கண்கள் கசிய அந்த இனவாதத் தாக்குதலைப் பற்றிய பேச்சு நமக்குப் போதும்.
இந்நிலையில்தான் குஹா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகங்களாக எழுதப் போகும் செய்தி வந்தது. அதில் முதல் பாகமான “Gandhi Before India” நூல் வெளியாகி தற்போது தமிழ் மொழிபெயர்ப்பும் வந்திருக்கிறது. குஹாவின், மேற்கோள்களைக் கொண்டே எழுத்தை நீட்டிச் செல்லும் வழக்கம், காந்தியின் வாழ்க்கை மீதான புதிய ஒளியைப் பாய்ச்சும் என்ற நம்பிக்கை இருந்தது. அது பெருமளவில் உண்மையாகியும் இருக்கிறது.
இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதி முடிக்க அவர் மேற்கொண்ட சான்றுகளின் தேடலை குறைத்து மதிப்பிட இயலாது. இதுவரை வெளிவராத சில சான்றுகளையும், ஆவணங்களையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறார். காந்தியைப் பற்றி இதுவரை நாம் அறிந்த சில தகவல்களின் நீள அகலங்களை மறுவரையறை செய்திருக்கிறார் குஹா.
தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்திலேயே இந்தியர்களின் போராட்டங்கள் விரைவில் முடிந்துவிட்டால் வழக்கறிஞர் படிப்புக்கு அடுத்ததாக லண்டனில் இன்னொரு படிப்பையும் காந்தி தொடரவிரும்பியிருக்கிறார். காலப்போக்கில் அது தொடர்பான கொள்கை மாற்றங்கள் அவருக்குள் ஏற்பட அதைத் தொடராமல் விட்டிருக்கிறார். புற்றுநோயைக் கூட நோயாளியின் மன உறுதியும் உணவு முறையும் எதிர்த்துப் போரிடும் என்ற கருத்து கொண்டவர் எடுத்திருந்த அந்த முடிவு ஆச்சரியம்தான்.
இதுவரையிலான காந்தி வரலாற்றை எழுதியவர்கள் காந்திக்கும் ஜின்னாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது 1908ஆம் ஆண்டு என்று பதிவு செய்திருக்கிறார்கள். 1895-1898 வரையிலான காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தியுடன் ஜின்னா நடத்திய கடிதத் தொடர்புகள் பற்றிய தகவல், கடிதங்களுக்கான பதிவேடு (Letter’s Log Book) ஒன்றின் மூலம் முதன்முதலாக வெளிவந்திருக்கிறது. அக்கடிதங்கள் நமக்குக் கிடைக்காத நிலையில் அவற்றின் உள்ளடக்கம் பற்றித் தெரியவில்லை. அப்போதுதான் பாரிஸ்டர் படிப்பை முடித்த ஜின்னா, தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் பணி வாய்ப்பு குறித்துப் பேசியிருக்கலாம் என்கிறார் குஹா. அப்படி காந்தியோடு தென்னாப்பிரிக்காவில் ஜின்னா வழக்கறிஞராக இணைந்து பணியாற்றியிருந்தால் வரலாற்றின் போக்கில் ஒரு சிறு திருப்பம் நடந்திருக்கலாம். காந்தியின் இளமைக் கால ஆளுமை பெரும்பாலும் எல்லோரையும் கவர்ந்தே இருக்கிறது.
காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வை சில பக்கங்களில் அல்லது அத்தியாயங்களில் எல்லோரும் கடந்துவிட அந்தக் காலகட்டமோ அவரது வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியைக் கொண்டிருக்கிறது. காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வு ஏன் இத்தனை முக்கியத்துவத்தோடு அலசப்பட வேண்டும்?
காந்தி ஐரோப்பிய பாணியிலான உடையிலிருந்து நேரடியாக அரையாடைக்கு மாறிவிடவில்லை. இயல்பிலேயே மென்மையான குணம் கொண்ட நபர் உடனே சத்தியாகிரகத்தைக் கைக்கொண்டு விட முடியாது. மனு போடுவதற்கும் குண்டு போடுவதற்குமான இடைநிலையை உடனே செயல்படுத்தி வெற்றி கண்டுவிட முடியாது. இந்தச் செயல்களுக்கு எல்லாம் இடைநிலைப்படி என்ற ஒன்று இருக்கிறது. காந்திக்கு அந்த இடைநிலை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. காந்தியின் இந்திய விடுதலைப் போராட்டங்கள் சாம்ப்ரான் சத்தியாகிரகத்தில் தொடங்கவில்லை, தென்னாப்பிரிக்காவில் தொடங்குகியிருக்கிறது.
காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வு அவரது ஆளுமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது போராட்ட வடிவங்களைச் சோதித்துப் பார்த்த களமாக விளங்கியிருக்கிறது. இந்தப் புத்தகம் அந்த ஆளுமை மாற்றத்தையும், அவரது கொள்கைகளில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சிகளையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறது.
இந்தியர்களின் உணவுப் பழக்கத்தைக் கூட அவர்களின் மதம்தான் தீர்மானிக்கிறது என்று இந்திய வரலாற்று ஆய்வாளர் டி.டி. கோசாம்பி குறிப்பிட்டிருப்பது பெரும்பாலான இந்தியர்களைப் போலவே துவக்ககால மகாத்மாவுக்கும் பொருந்திப் போகிறது. தன் சாதிக்குரிய கட்டுப்பாடுகளோடும், தாய்க்குக் கொடுத்த சத்தியத்தின் அடிப்படையிலும் சைவ உணவாளராக இருந்த காந்தி இங்கிலாந்தில் சைவ உணவாளர்களைச் சந்தித்த பிறகு சைவ உணவுப் பழக்கத்தை சாதிக்கட்டுப்பாடாக மட்டுமே கருதாமல் அதை ஒரு வாழ்க்கை முறையாக தென்னாப்பிரிக்காவில் வளர்த்தெடுக்க ஆரம்பிக்கிறார்.
இந்தியாவில் பிற்காலத்தில் அவர் நடத்திய போராட்டங்களுக்கு நிகரான போராட்டங்களைத் தென்னாப்பிரிக்காவில் நடத்துகிறார். இந்தியர்கள் இனவாதத்துடனும் நிறவாதத்துடனும் நடத்தப்பெறுவதைக் கண்டிக்கிறார். அதே சமயம் கருப்பினத்தவர்கள் மீது தாழ்வானதொரு பார்வையை வைத்திருக்கிறார் (துவக்க காலத்தில்). சீனர்களுடன் இணைந்து போராடும் அவர் ஆப்பிரிக்கர்களுடன் இணையவில்லை. அவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. (அதேசமயம் ஒரு ஆப்பிரிக்க பூர்வகுடி இனத்தலைவர் காந்தி சிறையில் அடைக்கப்பட்டதற்காக கண்டனம் தெரிவிக்கிறார். அவருடைய சத்தியாகிரக போராட்ட வடிவத்தைப் புகழ்வதோடு, ஆப்பிரிக்கர்களும் இந்தப் போராட்ட வடிவத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்கிறார். அவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறார். மண்டேலாவுக்கும் முன்பாக அங்கே காந்திக்கு ரசிகர்களும் சீடர்களும் இருந்திருக்கிறார்கள்.)
காலப்போக்கில் அவரில் ஏற்படும் ஆளுமை மாற்றத்தாலும் புரிதலாலும் படிப்படியாக அவரது இந்த எண்ணங்கள் மாற்றம் பெறுகின்றன. இறுதியில் ஆப்பிரிக்கர்களுக்காகக் குரல் கொடுக்கிறார். காலன்பாக் அமைத்த டால்ஸ்டாய் பண்ணையில் ஆப்பிரிக்கர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். ஆப்பிரிக்க மக்களை பூர்வகுடிகளாக ஏற்கிறார். அவர்களையும் தன்னுடைய போராட்ட வடிவங்களைக் கைக்கொள்ளுமாறு அழைக்கிறார்.
வாழ்க்கையையும் அவருடைய போராட்ட முறைகளையும் முயன்று தவறிக் கற்கும் களமாக அவருக்குத் தென்னாப்பிரிக்கா விளங்கியிருக்கிறது.
வெவ்வேறு இரு நிலப்பகுதிகளில், வாழ்வின் இருவேறு காலகட்டங்களில் ஒரே மாதிரியான வாழ்க்கையை, ஒரே மாதிரியான தோழர்களும் எதிரிகளுமாக, இரண்டு முறை வாழ்வதென்பது சபிக்கப்பட்ட வாழ்க்கைதான்.
காந்தியின் தோழர்களான ஹென்றி போலாக், மில்லி போலாக், இன்னும் சிலரும் நூல் முழுக்க அவருடன் நிகழ்த்தும் உரையாடல்கள் காந்தியின் பல கொள்கைகளின் மீது தாக்கம் செலுத்துகிறது, அவர்களுடைய கொள்கைகளிலும் வாழ்க்கை முறைகளிலும் காந்தி மாற்றங்களை உண்டுசெய்கிறார்.
இப்படி அவருடன் உரையாடும் தோழர்கள் ஒருபுறம் என்றாலும் அவருடைய தலைமையை அப்படியே மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளும் சீடர்கள் இன்னொருபுறம். பின்னாளில் இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு சீடர் படை அவரைச் சுற்றி உருவானதைப் போலவே வந்துபோகிறார்கள்.
தோழராக இல்லாமல் எதிராக நின்று உரையாடியவர்கள், அவர் தலைமயை ஏற்க மறுக்கும் நபர்கள், தங்களுக்குள் யார் அவருக்கு முதன்மைச் சீடராவது என்று மோதிக்கொள்ளும் நபர்கள் என்று இந்தியாவில் தான் சந்திக்கப்போகும் மனிதர்களை ஒத்தவர்களோடு தென்னாப்பிரிக்காவிலேயே வாழ்ந்திருக்கிறார்.
பின்னாளில் சர்ச்சில் போன்ற வெள்ளையின ஏகாதிபத்தியவாதிகள் காந்தி மீது கொள்ளப்போகும் அபிப்பிராயங்களை அப்போதே சாம்னி, ஸ்மட்ஸ் என்று தென்னாப்பிரிக்க ஐரோப்பியர்கள் இவர் மீது கொண்டிருக்கிறார்கள்.
(தென்னாப்பிரிக்காவில்) இறுதிக்காலத்தில் இஸ்லாமியர்கள் சிலர் காந்தியோடு முரண்படுகிறார்கள். அவர்களில் சிலர் காந்தியைக் கொல்ல முயற்சிக்கப்போவதாக ஒரு வதந்தி அவர் காதுக்கு வருகிறது. “என் நாட்டுக்காரரால் நான் கொல்லப்படுவதை விரும்புவேன். அது இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் ஒருங்கிணைக்கும்என்று காந்தி சொல்கிறார்.
புத்தகத்தின் இறுதி அத்தியாயங்களின் மொழிபெயர்ப்பு கவனக்குறைவோடு செய்யப்பட்டிருப்பதால், காந்தி திடீரெனக் காலப்பயணங்கள் மேற்கொள்ளுகிறார், மாவோ ஜெடாங் என்று யாரோ ஒரு சீன புரட்சியாளரும் அறிமுகம் ஆகிறார். சிலருடைய பெயர்கள் இருபதாண்டுக் காலத்துக்குப் பிறகு மாற்றப்பட்டிருக்கின்றன. .எம்.கச்சாலியா .எம்.சகாலியாவாக, ராய்சந்த் பாய் ரேச்சந்த்பாயாக, சோன்யா செல்ஷன் சோன்ஜா ஷிலேஷினாகவும் சோன்யா ஷ்லெஷனாகவும், ராணடே ராணேவாக இப்படிப் பலரின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன, காந்தியின் பெயர் மாற்றப்படாத வரை மகிழ்ச்சி என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். சில இடங்களின் பெயர்களும் கூட இறுதி அத்தியாயங்களில் மாற்றப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர் இந்தப் பெயர் மாற்றங்களை தென்னாப்பிரிக்க அரசிதழிலோ அல்லது இந்திய அரசிதழிலோ பதிவு செய்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
இவையெல்லாம் போதாது என்று சராசரியாக மூன்று பக்கங்களுக்கு ஒரு பிழையோடு இருக்கிறது. பத்தி பிரிப்பதில் முந்தைய பத்தியில் முடிவுறாத வாக்கியம் ஒன்று அடுத்தப் பத்தியின் துவக்கமாகத் துவங்குகிறது. மேற்கோள்களை, கடிதங்களை உள்ளொடுங்கிய பத்தியாக புத்தகத்தில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானதாக இருந்தாலும் அதை ஒழுங்காகச் செய்திருக்க வேண்டும். சில கடிதங்கள் சாதாரணப் பத்திகளாகத் துவங்கி பாதியில் இருந்து உள்ளொடுங்கிய பத்தியாக மாறுகிறது. அப்படியே தலைகீழாகவும் சில இடங்களில் நடக்கிறது. இந்த எழுத்துப்பிழைகள், கட்டமைப்புப் பிழைகளைத் தாண்டி பெரிய அபத்தம் குறிப்புகள் அடங்கியத் தொகுப்புகளில் முதல் அத்தியாயத்துக்கும் இரண்டாம் அத்தியாயத்துக்கும் ஒரே தலைப்புதான்.
இத்தனைப் புவியியல் பரப்புகளையும் (மூன்று கண்டங்களை உள்ளடக்கிய பகுதியின் ஒருவாறான வரலாறு பேசப்படுகிறது.), உடன் நின்ற பல போராட்டத் தோழர்களையும் நண்பர்களையும் பதிவு செய்திருக்கும் போது (குஹா வே இந்தத் துணை நபர்கள் சிறப்பானவர்கள் என்று குறிப்பிடுகிறார்.) அது தொடர்பான சொல்லடைவு அகராதியோ குறைந்தபட்சம் பெயரடைவு அகராதியோ கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். புத்தகத்தின் ஆங்கிலப் பதிப்பே இதனைக் கொண்டிருக்காத போது, தமிழ் மொழிபெயர்ப்பில் இதனை நாம் எதிர்பார்க்கக்கூடாதுதான்.
பெரும் உழைப்பு தேவைப்படும் இதுபோன்ற பணியை இப்போது எந்த தமிழ்ப் பதிப்பகங்களும் செய்வதே இல்லை. மெய்ப்புத் திருத்துபவர்கள் (Proof readers), பதிப்பாசிரியர்கள் (Editors), அகராதி உருவாக்குபவர்கள் (Indexer) –காரணப் பெயர்களாக இது போன்று சொற்களை மொழிபெயர்ப்பது அச்சொல்லுக்கு விளக்கம்தான் தருகின்றன. இடுகுறிப்பெயர்களாக மொழிபெயர்ப்பதே நல்லது என்று எனக்குப் படுகிறதுபோன்ற நபர்களுக்கும் புத்தகப் பதிப்புக்கும் தொடர்புகளே இல்லை என்பது போன்ற ஒரு நிலை தமிழ்ப்பதிப்புலகில் நிலவுகிறது. இந்த நிலைமை மாறாத வரை சராசரியாக பக்கத்துக்கு மூன்று தவறுகளோடு பதிப்பிப்பதும், மூன்று பக்கங்களுக்கு ஒரு தவறோடும் பதிப்பதுமே தமிழ்ப்பதிப்புலகின் மரபாக இருந்துவிடும்.
காந்தியின் மரணத்தோடு முடிந்துவிட்டதாகக் கருதப்படும் நவீன இந்தியாவின் வரலாற்றை இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு(India After Gandhi)” என்று எழுதிய குஹா , அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் காந்தி(Gandhi Before India)” என்று இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதன் அடுத்த பாகமாக Gandhi in India என்ற புத்தகத்தை எழுத இருக்கிறார். இது மட்டுமல்லாமல் நவீன இந்தியாவின் சிற்பிகள் (Makers of Modern India)” என்ற புத்தகத்தையும் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். 1857 தொடங்கி காந்தியின் வருகைக்கு முன்பு வரையான காலகட்டத்தைப் பற்றி இன்னொரு புத்தகத்தையும், இந்தியாவில் ஐரோப்பியர்களின் துவக்க காலத்தையும் எழுதிவிட்டால் கிரிக்கெட் வரலாற்றாளர் என்ற நிலையில் இருந்து நவீன இந்திய வரலாற்றை முழுதாக எழுதிய வரலாற்றாசிரியர் ஆகிவிடுவார் குஹா .

10.11.14

மொழிப்போர்

தற்போது இந்தியைத் திணிக்க விரும்பும் ஆட்சியாளர்கள் கால மாற்றத்தைக் கவணிக்கத் தவறுகிறார்கள். எண்பது ஆண்டுகளுக்கு முந்தையச் சூழல் தற்போது இல்லை. உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தி என்னும் குதிரையைக் கொண்டு இந்தியக் குண்டுச்சட்டிக்குள் கூடக் குதிரை ஓட்ட முடியாது என்பதை தமிழகத்தில் கூலி வேலை செய்யும் இந்தி பேசும் வட இந்தியச் சகோதரன் எங்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறான்.

கூடுதலாக கணினி முதல் அலைப்பேசி வரை தமிழ் தெரியுமா எழுத முடியுமா எனப் பார்த்து வாங்கும் காலம் இது. சமூக வலைத்தளங்கள் கூட அந்தப்பகுதி மொழிகளில் இடைமுகப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்களை ஆட்டி வைக்கும் கயிற்றை கையில் வைத்துக் கொண்டிருக்கும் பண்ணாட்டு/உள்நாட்டு நிறுவனங்கள் கூட தங்கள் பொருட்களைச் சந்தைப்படுத்த அந்தந்த பகுதிகளின் மொழியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு தேசத்துக்கு ஒற்றை மொழி என்ற நூறு வயதான ஐரோப்பியச் சிந்தனை முறை ஒத்து வராது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த எண்பது ஆண்டுகளாக நடந்த/நடைபெற்றுவரும் இந்தி திணிப்பு முயற்சிகளும் அதற்கெதிராக இங்கு நடந்த மொழிப்போரையும் சுருக்கமாகச் சொல்லும் நூல் கிழக்குப் பதிப்பக வெளியீடான ஆர்.முத்துக்குமார் எழுதிய “மொழிப்போர்” எனும் நூல்.
இந்தி எதிர்ப்புப் போர் இரண்டு முறை மட்டுமே நடைபெற்றதாக ஒரு மயக்கம் இங்கு பலருக்கும் ஏற்படுமாறு வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை அதுவல்ல தொடர்ச்சியாக இந்தி திணிப்பு இங்கு நடைபெற்று வருவதையும் அதற்கான எதிர்வினைகளும் தொடர்ச்சியானது என்பதை இந்நூல் பதிவு செய்கிறது.
சில தினங்கள் முன்பு புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் அகில இந்திய வானொலியில் இந்தி ஒலிபரப்புத் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ‘தமிழகத்தில் மத்திய அரசு விளம்பரங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தான் வெளியாகின்றன’ என்றார். எனது புரிதலின்படி அவர் பங்குபெற்ற நிகழ்ச்சிகளைக் கூட அவர் தொலைக்காட்சியில் பார்க்கும் வழக்கம் இல்லாதவராகவும் செய்தித்தாள்கள் பார்க்காதவராகவும் இருப்பார். அதே நிகழ்ச்சியின் விளம்பர இடைவெளிகளில் “சூச்சு பாரத்” என்ற விளம்பரம் முழுக்க இந்தியில் ஒளிபரப்பாகிறது. (இந்த வார்த்தையை நான் தட்டச்சிக் கொண்டிருக்கும் இந்த நொடியிலும் இந்தியில்தான் இந்த விளம்பரம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.) இதை அந்நிகழ்ச்சியின் நெறியாளர் ஜென்ராம் எடுத்துக் கூறிக் கேள்வி கேட்கும் போது, நான் பார்த்ததில்லை முன்பு வெளியாகியிருக்கும் என்றார். மழுப்பல்.
இதேநிகழ்ச்சிதான் என்பது ஆண்டுகளாக வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு காலகாட்டங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தியைத் திணிப்பார்கள். ஆவேசமாய் இதுதான் உறுதி என்பார்கள். எதிர்ப்பு வலுக்கும். அடக்கப் பார்ப்பார்கள். முடியாது. மழுப்புவார்கள். பின் வாங்குவார்கள். இது ஒரு சுழற்ச்சியாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது.
இப்படி 1930களில் இருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இங்கு நடைபெற்ற இந்தித் திணிப்பு முயற்சிகளையும், அதற்குத் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட எதிர்வினைகளையும் ஏழு கட்டங்களாகப் பிரித்து ஒவ்வொரு கட்டத்தைப் பற்றியும் அலசி இருக்கிறார் நூல் ஆசிரியர்.
ஒவ்வொரு கட்டப் போராட்டமும் “இந்தித் திணிப்பு முயற்சி –  அதற்கான நடவடிக்கைகள் – அதற்கு எதிரானப் போராட்டங்கள் – போராட்டத் தலைவர்கள், அவர்களது நடவடிக்கைகள் – எதிரணியிலிருந்த தலைவர்கள், அவர்களது ஆதிக்கப் பேச்சுகள் – போராட்டங்கள் வலுப்பது – எதிரணியிலிருந்து மழுப்பல், பின்வாங்கல்” இந்தச் சுழற்சியிலேயே மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது என்பதை இந்நூலை நாம் படிக்கும் போது உணர்ந்துகொள்ளலாம். சமீபத்திய நடவடிக்கைகளும் இதே சுழற்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைப் பொருத்திப் பார்க்கலாம்.
ஆட்சியதிகாரத்தின் மையப்பகுதியாக விளங்கும் டெல்லியைச் சுற்றிப் பேசப்படும் இந்தியின் கிளைமொழிகளில் ஒன்றான ‘கரி போலி/கடி போலி’ என்னும் மொழியையே உயர்த்திப் பிடிக்க இந்திய அரசு முனைவதையும், இந்த வழக்கிலான மொழியைப் பேசும் மக்கள் தொகை இரண்டு சதவிகிதமே (இன்றளவும் இந்த சதவிகிதம் கூடவில்லை) என்பதை இந்நூல் பதிவு செய்திருக்கிறது. அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்ற விவாதங்களில் சிலவற்றையும் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்க்கும் தரப்பினரின் வாதங்கள் பலவற்றையும் இந்நூல் பதிவு செய்திருக்கிறது. இந்தக் காரணங்கள் இன்றளவும் இப்படியே இருப்பது கண்கூடு.
மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு இந்தி பேசாத பிற மாநிலங்களில் எதிர்ப்பு இருந்ததை அடிக்கடி குறிப்பிடுகிறார் நூல் ஆசிரியர். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தமிழகத் தலைவர்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு ஜின்னா, தாகூர் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறார். அதேபோல இந்தி திணிப்புகள் பற்றி நாடாளுமன்ற கூட்டங்களில் நடைபெற்ற விவாதங்களில் தமிழரல்லாத இந்தி எதிர்ப்பு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பேசிய பேச்சுகளையும் ஆங்காங்கே தந்திருக்கிறார்.  ஆனால், தமிழகம் தவிர்த்து இந்தித் திணிப்பை எதிர்த்த பிற மாநிலத்தில் நடைபெற்றப் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தனியே ஒரு அத்தியாயத்தில் தொகுத்திருந்தால் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் இந்தியாவில் பல பகுதிகளிலும் நடைபெற்றது என்பதை உணர்த்தியிருக்கலாம். (நூல் ஆசிரியர் ‘இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழகம் திரண்ட வரலாறு’ என்று நூலின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியிருந்தாலும், இப்படி ஒரு அத்தியாயத்தைச் சேர்ப்பதில் பழுதில்லை.)
நான்காம் கட்ட இந்தி எதிர்ப்புப் போரின் போது பெரியார் ஏன் எதிர் நிலையை எடுத்தார் என்பதை ஒரே ஒரு பத்தியில் கடந்து சென்று விடுகிறார். அதே போல அண்ணா போராட்டத் தலைவர்களை போராட்டத்தை நிறுத்த அறிவுறுத்தியதையும், ராஜாஜி போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததையும் கூட ஒரு சில பத்திகளில் கடந்துவிடுகிறார் நூலாசிரியர். இந்த மூன்று பேரின் நிலை மாற்றங்கள் குறித்து இன்னும் விரிவாகப் பேசியிருந்தால் மொழிப்போர் குறித்து தெரிந்து கொள்ள விரும்பும் இளைஞர்களுக்கு அது சரியானப் பார்வையைக் கொடுத்திருக்கும்.
பொதுவாகக் கிழக்குப் பதிப்பகப் புத்தகங்களில் மற்ற தமிழ்ப்பதிப்பகப் புத்தகங்களின் காணப்படும் எழுத்துப் பிழைகளின் அளவை விட குறைவாகவே இருக்கும். ஆனால், இந்தப் புத்தகத்தில் சில எழுத்துப் பிழைகள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டிருப்பது கண்ணைக் கொஞ்சம் அதிகமாகவே உறுத்துகிறது. கள்ளக்குறிச்சி என்ற ஊரின் பெயர் கல்லக்குறிச்சி என்றும், கல்லக்குடி-கள்ளக்குடி என்று மாறி மாறியும் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற எழுத்துப்பிழைகளைக் கூட இன்றையத் தமிழ்ப் பதிப்புச் சூழலில் வெளிவரும் எழுத்துப்பிழைகளோடு ஒப்பிட்டு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்த பிழை மண்ணிக்கவே முடியாதது. அது, ‘தாளமுத்து’வின் பெயர் பல இடங்களில், அத்தியாயத் தலைப்பு உட்பட ‘தாலமுத்து’ என்றே அச்சிடப்பட்டிருக்கிறது.  மொழிப்போர் வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல இந்நூலை அறிமுகக் கையேடாகப் பயன்படுத்தலாம்.

11.7.14

சாதியை ஒழிக்கும் வழி ~ அம்பேத்கர் – புத்தக அறிமுகம்

“…அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்…
~ அம்பேத்கர்”
இந்தியாவின் அத்தனைச் சமூகச் சமனின்மைக்கும், சிக்கல்களுக்கும் காரணமாய் சாதிதான் மைய இழையாக விளங்குகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குரு ஏழாம் கட்டத்திலிருந்து எட்டாம் கட்டத்திற்குத் தாவியதும் புரட்சி வந்துவிடும், இதோ புரட்சி வருகிறது என்று முக்காலம் உணர்த்தும் வினைச்சொற்களில் பேசிவருபவர்கள், வர்க்கத்துக்குக் கீழ் நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சாதியைப் புறக்கணித்ததால் புரட்சி அடுத்த  முட்டுச்சந்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறது. இந்தப் பார்வைக் கோளாறை உணர்ந்தச் சிலரில் பெரியாரும் அம்பேத்கரும் சமகாலத்தவர்கள்.
சமூகக் கேடுகளை ஒழிக்க சாதியை ஒழிக்க வேண்டும், சாதியைக் கட்டிக்காப்பாற்றும் கடவுளை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து இயங்கியவர் பெரியார். சாதியை ஒழிக்கும் வழிகளை வரலாற்றுப் பூர்வமான பார்வையோடும் தீர்க்கமான விவாதங்களோடும் அம்பேத்கர் முன்வைத்த ஒரு உரை “Annihilation of caste”.
ஜாத்-பட்-தோடக்-மண்டல் என்ற சீர்திருத்த அமைப்பின் மாநாட்டின் தலைவராக அம்பேத்கரை அவர்கள் அழைத்து அதற்கான தலைமை உரையாகத் தயார் செய்யப்பட்டு, இந்த உரையின் கருத்துகள் சிலவற்றோடு மண்டலுக்கு உடன்பாடு இல்லாததால் கூட்டம் நடைபெறாமல் போனதால், அந்த உரையைப் புத்தகாமக வெளியிட்டார் அம்பேத்கர். இந்த நிகழ்வுக்குச் சில ஆண்டுகள் முன்பாக பெரியாரையும் இதே அமைப்பு இது போன்றதொரு மாநாட்டுக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து, பிறகு ‘இந்த நபர் ஒரு இந்து மத விரோதி, சாஸ்திர விரோதி’ எனப் பலவாறு பலரால் தூபம் போடப்பட்டு பெரியாருக்கு விடுத்த அழைப்பு பின்னர் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.
இந்த உரை வெளியான அடுத்த ஆண்டே பெரியார் குடியரசு இதழில்  ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்ற பெயரில் ஒராண்டுகளுக்குத் தொடர் கட்டுரைகளாக மொழிபெயர்த்து வெளிவரச் செய்திருக்கிறார், பின்னர் புத்தகமாகவும் கொண்டு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசின் முழு இதழிலும் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது, பின்னர் ஒலிநூலாகவும் கொண்டு வரப்பட்டது. அம்பேத்கர் நூல் தொகுப்பின் முதல் பாகத்தில் இந்த உரை முழுதும் இருக்கிறது. சமீபத்தில் நவயானா பதிப்பகம் இந்த உரையை புத்தகமாக அருந்ததி ராயின் முன்னுரையோடு வெளியிட்டது.

புத்தகத்தை நம் வசதிக்காக நான்கு பாகங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்.
முதல் பகுதி, சாதியின் பல்வேறு பரிமாணங்களையும் அவற்றின் கட்டமைப்பையும், சோசலிஸ்ட்டுகளின் பொருளாதாரச் சமத்துவம் என்ற கோட்பாட்டை சாதியும் மதமும் இங்கு எப்படி பொருளில்லாததாக மாற்றுகிறது (அம்பேத்கரும் ஒரு பேபியன் சோசலிஸ்ட்தான்), புரட்சியை முன்னெடுக்கும் ஒற்றை வர்க்கத்தின் உருவாக்கத்தை தடுக்கும் காரணியாக சாதிதான் விளங்குகிறது என்பதையும், சாதியின் தோற்றம் அதன் அவசியம் பற்றிக்கூறப்படும் பல கருத்துகளை மறுப்பதும், இந்துக்களின் கூடிவாழும் சமூகமாய் வாழும் பன்பு இல்லாமைக்கான காரணங்கள் பற்றியும், இந்துமதம் ஏன் பரப்புரையில் ஈடுபட்டு மதமாற்றம் செய்வதில்லை என்பதையும், இங்கே ஒவ்வொருவருக்கும் சாதி எவ்வளவு முக்கியமானதாய் இருக்கிறது, சாதியின் பெயரால் ஒவ்வொருவருக்கும் கீழே உள்ளவனை மேலே உள்ளவன் அடக்குவதின் உளவியலையும், சாதியானது தொழில்தேர்விலும் பொருளாதார ஏற்றத்தாழ்விலும் பங்குவகிப்பது என்று பலதையும் இந்தப் பகுதியில் விளக்குகிறார்.
இரண்டாம் பகுதி சாதிகள் ஏன் ஒழிக்கப்பட்டு சமத்துவம் நிலவ வேன்டும் என்பதற்கான காரணங்களைக் கொண்டிருக்கிறது. சாதி ஒழிக்கப்பட்டு சமத்துவம் நிலவாத வரையில் இடஒதுக்கீடு என்ற சமூக நீதி நிலவியே தீர வேண்டும் என்பதை பின்வருமாறு கூறுகிறார்.
…மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்கள் இவ்வாறு சமமாக இல்லை என்பதால் நாம் அவர்களைச் சமம் இல்லாத முறையில் நடத்த வேண்டுமா? சமத்துவத்தை எதிர்ப்பவர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கூற வேண்டும். மனிதர்களின் முயற்சியில் சமம் இல்லாத அளவுக்கு அவர்களை நடத்துவதில் சமம் இல்லாமலிருப்பது நியாயமாயிருக்கலாம். ஒவ்வொருவரின் திறன்களும் முழு வளர்ச்சி பெற உதவுவதற்கு முடிந்தளவுக்கு ஊக்குவிப்பு அளிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் முதல் இரண்டு விசயங்களில் சமமாக இல்லாதவர்களை சமம் இல்லாமலே நடத்தினால் என்ன ஆகும்? பிறப்பு, கல்வி, குடும்பப் பெயர், தொழில்-வணிகத் தொடர்புகள், பரம்பரைச் சொத்து ஆகியவை சாதகமாக உள்ளவர்களே வாழ்க்கைப் போட்டியில் தேர்வு பெறுவார்கள். ஆனால், இது திறமை உள்ளவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வு ஆகாது; விசேச உரிமைகள் பெற்றவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்வாகவே இருக்கும்.
…சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் மிக உயர்ந்த பலனைப் பெறுவது சமூகத்துக்கு நல்லது என்றால், ஆரம்பத்திலேயே எல்லோரும் முடிந்த அளவு சமமாக இருக்கச் செய்வதுதான் அவ்வாறு உயர்ந்த பலனைப் பெறுவதற்கு வழியாகும்.
~ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 85
இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கூச்சல் உண்மையாக, சாதியை ஒழித்து சமத்துவம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையாகத்தான் இருக்க வேண்டும் என்ற புரிதலை இந்தப் பகுதி நமக்கு விளக்குகிறது.
மூன்றாம் பகுதி, வர்ணாசிரமத் தர்மத்துக்கும் சாதிக்குமான உறவும், வர்ணமுறையில் உள்ள முரண்பாடுகளையும், சாதியைக் களைந்துவிட்டு தகுதியின் அடிப்படையிலான புதிய வர்ண முறையை  முன்வைத்த ஆரிய சமாஜிகளைப் பற்றிய விமர்சனத்தையும் அது ஏன் சரியான வழிமுறையை கொண்டிருக்கவில்லை, சாதி ஒழிப்புக்கு அப்போது (அம்பேத்கர் காலத்தில்) கூறப்பட்ட கிளைச்சாதி ஒழிப்பு, சமபந்தி போன்றவை ஏன் பொருத்தப்பாடு இல்லாததாக உள்ளது போன்ற கருத்துக்களை இந்தப் பகுதியில் முன்வைக்கிறார்.
நான்காம் பகுதியில், புத்தகத்தின் மையமான சாதிகளை ஒழிக்கும் வழியை விளக்குகிறார். இந்தப் பகுதியில் மண்டல் அமைப்பினரை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள், அவர்களுக்கு வழங்கும் அறிவுரைகள் என்று இருப்பதாலேயே படிப்பவரை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளாகவும், வழங்கப்படும் அறிவுரைகளாகவும் இருக்கிறது.
சாதியை அதற்கு நேருக்கு நேராக நின்று தாக்கும் தாக்குதல் என்பதாகப் பின்வருமாறு “… சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது…” கூறுகிறார்.
சாதி என்பது அன்றாடம் நாம் கையால் தொட்டுப் பயன்படுத்தும் ஒரு பொருளில்லை, அது ஒரு மனப்பான்மை. மக்களின் மனங்களில் புரையோடிப்போயிருக்கும் மனப்பான்மை. மதம், வேதம், புராணம், கடவுள் போன்ற புனிதக் கூட்டுகளை அடிப்படையாகக் கொண்டு சாதி என்கிற மனப்பான்மை தெய்வீகமானது என்ற கருத்தாக உருவாக்கப்பட்டிருக்கிறது. “… சாதிக்கு இருக்கும் புனிதத் தன்மையையும் தெய்வீகமானது என்ற கருத்தையும் அழிக்காமல்…” இந்த சாதி மனப்பான்மையை ஒழிக்க முடியாது, இதற்கு அதன் அடிப்படைக் கட்டமைப்புகளைத் தாக்கிச் சீர்திருத்த வேண்டும்.
இந்துமதத்தின் ஸ்ருதிகள், ஸ்மிருதிகள் தத்துவக் கருத்துக்களாக இல்லாமல், சட்ட விதிகளாகவே இருக்கிறது. “…இந்துக்கள் மதம் என்று கூறுவது உண்மையில் சட்டமே; அல்லது அதிகமாகப் போனால் சட்டப்படியான வகுப்பு ஒழுக்குமுறையே…” என்கிறார். காலத்துக்கு ஒவ்வாத, சமத்துவத்தை குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய சட்ட விதிகளை நீக்கி விட்டு இந்து மதம் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாக இயங்கும்படி செய்ய வேண்டும். அந்த அடிப்படை தத்துவமும்  அல்லது கோட்பாடு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்ட சனநாயகத் தன்மை உடையதாக இருக்க வேண்டும் என்கிறார். அம்பேத்கர் கூறும் சாதியை ஒழிக்க மதத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து இந்த அடிப்படையிலானதே.
புத்தகத்தின் இறுதிப்பக்கங்களைப் படிக்கும் போது பெரியாரும் ஏறக்குறைய இதுபோன்றதொரு கருத்தை இன்னும் தீவிரமாகப் பேசியிருக்கிறாரே என்று நினைவுக்கு வந்தது. தேடியபோது, அந்த பேச்சும் கிடைத்தது.
“…முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவு தெரிந்துவிடவேண்டும். இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு கீழோ,மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்குமேல் சாதிவித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ளவைகளை அடியோடு அழிக்க முயலவேண்டும். அப்படிச் செய்யாமல், உயர்வு தாழ்வைப் போக்கி விடலாமென்று கருதுதல் நுனிமரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே ஒக்கும். சாதி, ஆசாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன. சாதியை மரத்திலிருந்து பிரிக்க வேண்டும். இப்படிப் பிரிப்பதற்கு முடியாத வரையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றையொன்று பிரிக்க முடியாத வகையில் சாதியையும், மதத்தையும் பிணைத்துப் பின்னிக் கொண்டிருக்கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால், சாதியை அழிக்கத் தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறதே என்று பயப்படாமல் சாதி மரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்துச் சாம்பலாக்க வேண்டியது தடுக்கமுடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது, மதமானது வேதம்,புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இந்த வேதம், புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாய் இருந்தால், இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான். ஆனால், இந்த வேதம், கடவுளுடன் சேர்த்துக் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத இணைப்பு இருந்தால் அந்தக் கடவுள் என்பதன் தலையிலும் கை வைத்துதான் ஆக வேண்டியிருக்கிறது. வேதத்தை இழுத்தால் கடவுளுக்கும் அசைவுதான் கொடுக்கும். இதில்தான் பெருத்த சங்கடப்படக்கூடும். கடவுளை அசைப்பதா என்று பயப்படக்கூடாது. எனவே சாதி,மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும் ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து வராது….
…இப்படி நாம் சாதி வித்தியாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்துபோகுமேயென்றால் அந்த மதம் நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தைப் பொசுக்கும் போது வேதமும் பொசுங்கிப் போவதாயிருந்தால் அந்த வேதம் என்பதும் இப்போதே வெந்து போகட்டும். வேதத்தை ஓட்டும்போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்தக் கடவுள் என்பதும் இந்த நிமிசத்திலேயே ஓடிவிடட்டும். அப்படிப்பட்ட கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம். “
~ பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 4, மதமும் கடவுளும் 1, பக்கம் 2244-45
இந்தக் கருத்தைப் பெரியார் எந்த காலகட்டத்தில் பேசியிருக்கிறார் என்று பார்த்தால் 1929 ஆம் ஆண்டு. அம்பேத்கரையும் அவர் கருத்துக்களையும்  தமிழகத்துக்குப் பெரியார் அறிமுகப்படுத்திய ஆண்டு இதுதான் என்கிறார் எஸ்.வி.இராஜதுரை.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் இப்போதைய தேவை என்ன?
அம்பேத்கரின் இந்த உரையைப் பற்றி மகாத்மா காந்தி அரிஜன் இதழில் எழுதிய சில கட்டுரைகளும், அதற்கு அம்பேத்கரின் எதிர்வினைகளும் கூட இந்தப் புத்தகத்தோடே தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்த மறுப்புரையில் மகாத்மா காந்தி பின்வருமாறு கூறுகிறார்,
“எந்தச் சீர்திருத்தவாதியும் அவரது உரையைப் புறக்கணிக்க முடியாது. பழமை மரபுள்ளவர்கள் அதைப் படிப்பதால் பயனுறலாம். இப்படிச் சொல்வதால் அவருடைய உரை மறுப்புக்குரியது அல்ல என்று பொருளாகாது. மிகவும் தீவிரமான மறுப்புக்குரியது என்பதற்காகவே அதைப் படிக்க வேன்டும்…”
மகாத்மாவின் வார்த்தைகளைப் பழமைவாதிகளும், சங் பரிவார்களும் அப்படியே பின்பற்றி இந்த நூலில் என்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்து மதத்தின் குறைபாடுகள் என்று அம்பேத்கர் பட்டியலிடப்பட்ட பலதை இன்றைய சங் பரிவாரங்கள் வேறு வகையில் திருப்பிக்கொன்டிருக்கின்றன. “…கிறித்துவ மிசனரிகளைப் போல ஓர் இந்துவால் பழங்குடிகளுக்கு காரியமாற்ற முடியாது…’ என்று அம்பேத்கர் கூறியிருந்தார். இன்று கிறித்துவ மிசனரிகளைத் துரத்திவிட்டு காவிக்கொடிகளை பழங்குடிகளின் குடிசைகளில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்துக்களுக்கு என்று பொதுவான மனப்பாங்கு இல்லை என்று கூறியதைத்தான், விராட் இந்து, இந்து ஒற்றுமை என்று சுனாமனா சாமி வேலைத்திட்டமாக வைத்துக்கொண்டிருக்கிறார். வேத, புராணங்களின் மதிப்பு குறைக்கப்படாமல் சாதிகள் ஒழியாது என்றதைச் சரியாக புரிந்து கொண்ட இந்துத்துவ வாதிகள் வேத,புராணங்களின் மதிப்பை உயர்த்தும் செயற்பாடுகளைச் செய்துகொன்டிருக்கின்றன.
சாதியை ஒழிக்கத் தேவையான முதல் வழியாக அம்பேத்கர் கூறும் கலப்புத் திருமனங்களுக்கு ஆபத்து நேர்ந்திருக்கும் காலம் இது, இளவரசனும் மற்றபிற ஆயிரத்தெட்டு கௌரவக் கொலைகளும் இதைத்தான் கூறுகின்றன. சாத்திரங்களின் (ஸ்மிருதிகள், ஸ்ருதிகள்) உண்மைத்தன்மையை விளக்கி, அவற்றின் புரட்டுகளைப் போட்டு உடைத்து அவற்றின் உயர்நிலையைக் குறைக்காத வரை இந்தச் சாதி ஒழியாது என்று அம்பேத்கர் சொன்னவற்றுக்கு மாறாக இன்று இவற்றின் பெருமையை உயர்த்திப் பிடித்து மேலும் சாதியை வலுவாக்கும் வழிமுறைகள் தானே நடந்துகொண்டிருக்கின்றன. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதானால், “…நீங்கள் எந்தத் திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாது…” இது ஒட்டுமொத்த சமூகத்துக்குமான கருத்தாக எடுத்துக்கொண்டாலும் சரி, ஒரு தனிமனிதனுக்குரிய கருத்தாக எடுத்துக்கொண்டாலும் சரி, அவர் இந்தப் புத்தகத்தில் வழிகாட்டியிருக்கிறார்.
—–

4.4.12

சோளகர் தொட்டி

சமீப காலத்தில் அதிக கனத்தோடு கையில் சுமந்து படிந்த புத்தகம் இந்த சோளகர் தொட்டி. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த புத்தகம்.
இந்த அரசமைப்பு, அதிகாரத்தின் மீது கொன்டிருக்கிற தீராக்காதலால், அதற்கு பங்கம் ஏற்படும் போதெல்லாம் அடக்குமுறையைக் கையாள ஒரு போதும் தவறுவதில்லை. அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் அந்த நாட்டின் சொந்தக் குடிகளா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அதற்கு அக்கறையில்லை. இதுவரை மனித குலம் கண்ட எல்லா அரசாட்சி முறைகளிலும் அரசு என்கிற இயந்திரம் அடக்குமுறையை தனது பிரதான கருவியாகவே பயன்படுத்தி வந்ததை வரலாறு நமக்கு சொல்கிறது. பண்டைய ரோம அரசாட்சியிலிருந்து இன்றைய கூடங்குளம் வரை, ஒவ்வொரு நிகழ்வையும் இதற்கு சான்றாய் பதிவுசெய்து பதிவுசெய்து நீட்சியடைந்த பெருத்த புத்தகமாய் இன்று உருவடைந்து நிற்கிறது. அப்படி, நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வை பதிவு செய்கிறது சோளகர் தொட்டி என்னும் நாவல்.
அரச வன்முறையை வரலாற்றில் பதிவு செய்த எல்லா புத்தகங்களோடு இதையும் ஒன்றாய் அடக்கி விடமுடியாதபடிக்கு இப்படைப்பை எடுத்துச் செல்வது சோளகர் தொட்டி பதிவு செய்திருக்கும் மக்களும், அவர்களின் வாழ்க்கையும் தான்.
நம்மால் அதிகம் தெரிந்து கொள்ளப்படாத, நம்மால் புரிந்து கொள்ளமுடியாத இயற்கையோடு உறவு கொண்ட, நம்மிலிருந்து வித்தியாசப்பட்ட புவியியல் அமைப்பையும், வாழ்வியல் முறைகளையும் கொண்ட பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை, அவர்கள் வாழ்வியலை பதிவு செய்வதோடு, அவர்கள் அரச வன்முறையில் சிக்கிச் சீரழிந்த ஒரு துயர வரலாற்றையும் இந்நாவல் பதிவு செய்கிறது.
நாவலின் முன்பகுதி சோளகர்களின் (ஒரு பழங்குடிக் குலம்) மண்ணை, அவர்களின் சாமிகளை, சடங்குகளை, தொன்மங்களை, திருமன உறவுகளை, விதவைகளின் நிலையை, கொத்தல்லி, கோல்காரன் போன்ற அவர்களின் சமூக அமைப்பை, விவசாய முறையை, அவர்களின் இசைக்கருவிகளை, இசையையெல்லாம் கஞ்சாப் புகை திரண்டு நமக்கு நெடியேற்றும் படி பதிவு செய்திருக்கிறார். கஞ்சா வாடையின் சூழலில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்த வாடை கலந்து, சோளகர்களின் தொட்டியெங்கும் கண்ணீரோடு ரத்த வாடை காற்றில் மிதக்கிறது. முதல் பாகம் முழுதும் கஞ்சா வாடை என்றால், இரண்டாம் பாகத்தில் இருட்டறையின் மூத்திர நெடியோடு கலந்த ரத்த, சீழ் நாற்றம்தான்.
நாவலின் இரண்டாம் பாகத்தின் துவக்கத்திலிருந்தே அரச வன்முறை இல்லாத பக்கமே இல்லை. அதிரடிப்படையினரிடம் சிக்கிய ஒவ்வொரு பழங்குடி ஆணும் அவர்கள் பார்வையில் வீரப்பனுக்கு அரிசியும், உணவுப்பொருட்களும் கடத்திப்போய் கொடுத்தவர்கள், அவர்கள் வீரப்பனை பார்த்ததாக பொய்யாவது சொல்லும் வரை அடி, உதை தான். பெருவிரலை திருப்பி மடக்கி மெல்லிய இரும்பு கம்பியால் கையோடு சேர்த்துக் கட்டுவது ஒரு வகை விசாரணை முறை, இதனால், அந்த நபர் இனி ஒரு நாளும் தன் கையால் எந்த பொருளையும் தூக்க முடியாது. காவலர்கள் இதற்கு தரும் விளக்கமோ, “இனி அவர்களால் துப்பாக்கியே தூக்க முடியாது”.
அதேபோல அதிரடிப்படை கைது செய்த ஒவ்வொரு பழங்குடி பெண்ணும் வீரப்பனுடன் பாலியல் உறவு கொண்டவர்கள் என்ற நோக்கிலேயே விசாரணை இருக்கிறது. வீரப்பனுடன் உறவு கொண்டவர்கள் எங்களுடன் உறவு கொள்ள மாட்டீர்களா என்ற உப கேள்வியும் உண்டு. விசாரணை அறையில் பிறந்த குழந்தை வீரப்பனுக்கு பிறந்ததாய் கேலி பேசப்பட்டு முழுநாள் கூட உயிர்வாழ முடியாத நிலையை அடைகிறது. அதிரடிப்படை முகாமில் அடைபட்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணும் வன்புணர்ச்சி செய்யப்படுகிறார்கள், வயது வித்தியாசமெல்லாம் இல்லை.
அவர்களின் விசாரணை முறையில் பால் பேதம் கிடையாது, வயது பேதம் கிடையாது. காது மடல்களிலும், மார்பு காம்புகளிலும், பிறப்புறுப்புகளிலும் மின்சாரம் பாய்ச்சுவது. தலைகீழாக தொங்கவிடுவது, வலியை தாங்க முடியாமல் மலம் கழித்து விடுபவர்களை, அதை அருந்தச் செய்வது என்று உடல் ரீதியில் சிதைக்கும் வேலை ஒரு புறம் என்றால்.
தந்தையை மகனும், மகனை தந்தையும் லத்தியாலும், செருப்பாலும் அடிப்பதும், சிறுவயதுப் பெண்ணை நிர்வானப்படுத்தி, சங்கிலியிட்டு நிற்க வைத்து ஆண், பெண் என எல்லாக் கைதிகளையும் அவளைப் பார்க்கச் சொல்வது என மனரீதியாக சிதைவை உண்டாக்குவது மறுபுறம்.
இத்தகைய உடல்ரீதியான, மனரீதியான தாக்குதல்களோடு பாலியல் ரீதியான தாக்குதல்களை வன்முறை என்பதைவிட காட்டுமிராண்டித் தனமான வன்முறை என்றுதான் சொல்ல முடியும், தாயின் கண்ணெதிரில் மகளை, மகளின் எதிரில் தாயை, கணவனின் முன்னே மனைவியை, கர்ப்பினியை கூட்டாக புணர்வது என்பதையெல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?
இப்படிப்பட்ட கொடூரமான விசாரணை முறைகளை கதை கதையாய் சொல்லும் இந்த அத்தியாயங்களை மனம் கனக்காமல் யாராலும் கடந்து சென்று விடமுடியாது. ஒருவரின் உடலையும், மனதையும் சிதைக்க எப்படி ஒருவரால் முடிகிறது, அதுவும் குதூகலத்தோடு? நான்கு பேரை உள்ளே அறைக்குள் அடைத்து வைத்து வதைப்பதன் மூலம் எதைச் சாதித்துவிட முடியும், அதிலும் ஒன்றும் தெரியாத சில அப்பாவிகளை? படித்த ஆசிரியர்களையும், நாகரிக மனிதர்களையுமே ஊடகங்களின் கண் முன்னே தாக்கத் துணிகிற அதிகாரம் கொண்ட காவல்துறை. படிப்பறிவற்ற, நம்மால் சொல்லிக் கொள்ளப்படும் நாகரிகமற்ற பழங்குடிகளின் மீது எத்தனை வெறியாட்டம் ஆடியிருக்கும் என்பதற்கான ஆவனம் இந்த சோளகர் தொட்டி.
காட்டோடும், இயற்கையோடும் தங்களைப் பினைத்துக்கொண்டிருக்கும் இந்தப் பழங்குடிகளின் கலாச்சாரத்தை நாம் அறியாமலே இவர்களை காட்டு மிராண்டிகளாகவும், நரமாமிசம் உண்பவர்களாகவும் சித்தரித்து வருகிறோம். சீருடை அணிந்தவர்கள் நரவேட்டையாடியது இவர்களைத் தான். ஒரு கரடியோ, மானோ எதுவானாலும் தொட்டியிலுள்ள அத்தனை பேரும் பகிர்ந்து உண்ணும் இவர்களது காட்டுமிராண்டி கலாச்சாரத்தை நாம் புரிந்து கொள்ளப் போவதில்லை.
இந்தப் பழங்குடிகள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இத்தனை கொடுமைகளை அனுபவித்த போதும் யாரும் தற்கொலைக்கு முயல்வதில்லை. கதையின் முக்கிய பாத்திரம் சிறையிலிருந்து தப்பிய பிறகு இனி அதிரடிப்படையினரிடம் சிக்கினால் தான் பலியிடப்படுவது உறுதி என்றான பிறகு, தொட்டிக்குச் செல்லமுடியாத நிலையிலும் தற்கொலை செய்வதில்லை, எதிர்த்து நின்று எவரையும் கொல்வதுமில்லை. தேவைக்கு அதிகமாக வேட்டையாடுவதையே எதிர்க்கிறார்கள். நாவல் முழுக்க எந்த சோளகனும் ஒருவனை கொல்லத் துணிவதே இல்லை, அவன் தன்னுடைய நிலத்தையே அபகரித்த போதும். ஒரே ஒரு இடத்தில் ஒருவன் இத்தனை அவமானங்களுக்குப் பிறகு தன் மனைவியைத் தற்கொலை செய்து கொள்ளும் படி ஆத்திரத்தில் கத்துகிறான், அதுவும் நடைபெறுவதில்லை. கொலையோ தற்கொலையோ எதுவுமில்லாத வாழ்க்கை முறை அவர்களுடய காட்டுமிராண்டி வாழ்க்கை முறை.
நாவலின் ஒரேயொரு குறையாக நான் காண்பது, மொழிநடை. பல இடங்களில் செய்தி வாசிப்புத் தொனி என்றாலும், துயர காவியத்துக்கு மொழி நடையெல்லாம் தடை இல்லை. வட்டார வழக்கில் அமைந்திருக்கலாம். சதாசிவம் விசாரணை ஆனையத்தின் முன் சாட்சி கூறிய இத்தகைய மனிதர்களின் கதையைத் தான், மனித உரிமை ஆர்வலரான ச.பாலமுருகன் சோளகர் தொட்டி என்கிற இந்த இலக்கியப் படைப்பாகத் தந்திருக்கிறார். இலக்கியம் சாதாரன மனிதனையேப் பாடுகிறது. விசாரனை ஆனையம் அதிகாரத்தின் பக்கம் நின்று வரலாற்றை பதிவு செய்தது. (அது பதிவு செய்த விதம் இது) வரலாறு எப்போதுமே வென்றவர்களால் எழுதப்படும் என்பது தான் வரலாறு, அது சாதரனனைப் பாடுவதே இல்லை.


இத்தகைய பழங்குடிகளைத்தான் தண்டகாருன்யாவிலிருந்து இடம்பெயர வற்புறுத்தி அதிகார வர்க்கம் முகாமிட்டிருக்கிறது. Armed Forces Special Power Act, போன்ற மனித தன்மையற்ற சட்டங்களைக் கொண்டிருக்கும் வடகிழக்கு மாநிலங்களிலும், ராணுவத்தின் விசாரணை முறைகள் இதை ஒத்ததாகவே இருப்பதால் தானே, சில மணிப்பூர் பெண்கள் நிர்வானமாக திரண்டு தங்களை கற்பழிக்குமாறு அரச வன்முறைக்கு எதிராக போராடினார்கள், பத்தாண்டுகளாகவே உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் சர்மிளாவும் அதே அரச வன்முறையைத்தான் எதிர்த்துதானே போராடி வருகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது போன்ற மனிதத் தன்மைக்கு விரோதமான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது. 

வீரப்பனைக் கொன்று மன்னில் புதைத்தாகிவிட்டது. காவலர்கள் பதக்கங்களோடு தங்கள் பொழுதை ஓய்வாய் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். தொட்டியில் கொத்தல்லி சீரழிந்து போன தங்களையும் தங்கள் வாழ்விடத்தையும் பற்றி பொட்டிப் பொடுசுகளோடு துயரத்தோடு காட்டை நோக்கிக் கொண்டிருப்பார்.

6.3.12

LE GRAND VOYAGE – உறவின் பெரும் பயணம்

உறவுகளுக்கும், பயணங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இரண்டிலும் துணையைப் பொறுத்தே அது சிறப்பாய் அமைவதோ, சீரழிந்து போவதோ இருக்கும். அப்படி, சரியாக அமையாத தந்தை-மகன் உறவும், அவர்களின் நீண்ட பயணமும் தான் LE GRAND VOYAGE திரைப்படத்தின் கதை. சில பயண அனுபவங்கள் தரும் படிப்பினைகள் வாழ்நாள் முழுதும் வருபவை, சிறு வயதில் நண்பன் அடித்த கல்லின் வடு நீங்காமல் உடலில் எங்கோ இருந்துகொண்டு அந்த நண்பனை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதைப் போல. அவர்களின் மொழியை அறியாத, அந்தப் பிரதேசங்களை கண்டிராத, அந்தக் கலாச்சாரத்தை வாழ்ந்திராத, அந்த உணர்வுகளை புரிந்திராத, அந்த உறவைப் பெற்றிராத எனக்கும் அந்த உணர்வை தந்த சிறந்த படைப்பு இந்தப் படம்.

சில ஆயிரம் ஆண்டுகளாகவே இது தந்தை வழிச் சமூகமாக இருந்து தொலைத்ததாலோ என்னவோ, தந்தை மகன் உறவையும், உறவுச்சிக்கலையும் அடிப்படையாய் வைத்து புனையப்பட்ட பல்லாயிரம் கதைகள் உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது. கிரேக்க பழங்கதைகளில் யுரேனசு-க்ரோனசு-சீயசு கதை, மூன்று தலைமுறை தந்தை-மகன் உறவுச்சிக்கலைப் பற்றியதுதான். யயாதி-யது என்று நம்மிடையே அந்தக் காலக் கதையிலிருந்து புத்தனாவது சுலபம் என்று இன்றைய கதைகள் வரையிலும் இச்சிக்கல் சரடாக பின்னப்பட்டு வரலாறு முழுதும் நீண்டு வந்துகொண்டே தானிருக்கிறது. தாயிடம் மகனின் பாசத்தைப் பிழிந்து சாறெடுத்த கதைகளும் ஏராளமாய் நம் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டுதானிருக்கிறது. காளிகளும், அம்மன்களும் பெருமளவில் விரவியிருப்பதால் இது சாத்தியமாயிருக்கலாம் அல்லது சிவனில் பாதியை சக்திக்கு வழங்கியிருப்பதால் வந்த விளைவாகவும் இருக்கலாம். ஆனால், நம் வட்டாரம் தவிர்த்து ஒட்டு மொத்த உலகுக்கும் ஒரே ஒரு மேரி மாதவே இருக்கிறாள். மும்மைத்துவமும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியையே பேசுகிறது.
இரு வேறு கலாச்சாரங்களை, வெவ்வேறு மொழிகளை, வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரு மனிதர்களையும் இணைக்கும் புள்ளிகள் தந்தையும் மகனும் என்ற உறவும், நீண்ட பயணமும் தான்.
மார்க்கத்தின் நெறி வழுவாத தந்தை, புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார், “புனிதப் பயணம், முடிந்தளவுக்கு சொகுசில்லாததாக இருக்கவேண்டும்” என்ற தந்தைக்கு மகிழுந்தை ஓட்டிச் செல்ல வேண்டிய மூத்த மகனால், அப்பணியை நிறைவேற்ற முடியாமல் போக, இளையவன் அப்பணியை செய்ய வற்புறுத்தப்படுகிறான். இளையவனோ தான் வாழும் கலாச்சாரத்தின் தாக்கத்தால், மார்க்க நெறிகளை இழந்து, தன் மூதாதையாரின் மொழியை பேசவும் தெரியாத மேற்கத்தியக் கலாச்சார பாதிப்பு கொண்ட மதமிழந்தவனாகத்தான் தந்தையால் பார்க்கப்படுகிறான். அவனுடைய பிரெஞ்சுக் காதலியைப் பற்றிய கோபமும் அவருக்கு இருக்கிறது. அவனோ தந்தையை நவீனத்தோடு ஒத்துப்போகாத, மதத்தைப் பிடித்துக்கொண்டு வாழ்கிற வறட்டு கிழவனாகப் பார்க்கிறான். நேரெதிரான குணங்களைக் கொண்ட, உறவுச் சிக்கலையுடைய இருவரும் சில ஆயிரம் கிலோ மீட்டர்களை ஒன்றாக பயணிக்கிறார்கள்.
வழக்கமான பயணத் திரைப்படங்களைப் போலவே வழியெங்கும் பலவிதமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தோடும், ஒவ்வொரு படிப்பினையைத் தந்து போகிறார்கள். மௌனத்தின் குறியீடாய் பின்தொடர்ந்து வரும் அந்த மூதாட்டி. சாத்தானின் குறீயிடாய், சுங்க அதிகாரிகளிடம் சிக்கும் போது காப்பாற்றும் உள்ளூர் வாசி, மகனைப் போலவே மேற்கத்தியக் கலாச்சாரத்தை தனதாக்கிக் கொண்டவன். அதற்காகவே, மகனால் ரசிக்கப்படுகிறார், தந்தையால் வெறுக்கப்படுகிறான். உதவி கேட்கும் ஏழைப் பெண். இவர்களைப் போலவே புனிதப் பயணம் மேற்கொள்ளும் இன்னும் சில குழுக்கள் என பலர் வந்துபோகிறார்கள்.
தந்தை-மகன் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் பல படங்களைப் போலவே தான் இப்படமும் இருக்கிறது. இருவருக்குமான தலைமுறை இடைவெளி தலைவிரித்தாடுகிறது. மகனின் வயதுக்கேயுரிய காதலை தந்தை எதிர்க்கிறார். நவீனத்தில் திளைத்திருக்கும் மகனுடைய அலைபேசியை அவனுடைய உறக்கத்தின் போது தூக்கிக் குப்பையில் வீசுகிறார். மதக்கடமைகளிலும் தந்தை தீவிரமானவராகவும், மகன் மதமற்றவனாகவும் இருக்கிறார். ஒருவரை மற்றொருவர் வெறுக்கிறார், இடையில் ஒருவர், கோபித்துக்கொண்டு பயணத்தை விட்டு பாதியில் விலகுவதும், சமாதானமாகி மீண்டும் தொடர்கிறார். இப்படி, இருதளங்களிலும் இந்தப் படம் வழமையானதாகவே இருந்தாலும், இயக்குனரின் திரை மொழி இதை சிறப்பானதாக மாற்றுகிறது.
மகன் பேசும் மொழியைத் தன்னால் பேச முடியும் என்றாலும், அவனிடம் அவர் பேசும் மொழி மௌனம்தான். அதைத் தாண்டி அவர் இந்தப் பயணத்தை தான் ஏன் சாலை மார்க்கமாகத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணமும், புனிதப் பயணம் மேற்கொண்ட தன் தந்தையை எதிர்பார்த்து காத்து நின்ற தருணங்களையும் விளக்குவதுதான், அதைத்தாண்டி அவர் பேசுவதெல்லாம் ‘இன்றிரவு இங்கே தங்கலாம்’ என்பதும் ‘வாகனத்தை ஒழுங்காகச் செலுத்து’ என்பதும் தான். மகனோ, தன் தந்தை பேசும் மொழியை புரிந்து கொள்ளாதவனாய் கூட்டத்திலிருப்பவர்களை வேடிக்கைப் பார்க்கிறான். மொழி தெரியாத இன்னொரு பிரதேசத்தில் வாழ்வது என்பது வேறு. அப்படிப்பட்ட சூழலில் அந்த மொழியைப் பேசிக்கொன்டிருப்பவர்களில் தன் தந்தையும் ஒருவர் என்றால், அந்த மகன் எந்த மனநிலையில் இருப்பான்.
தன் மதத்தை இழந்தவனாகவும், மொழியை இழந்தவனாகவும் வாழும் மகனை தந்தை நொந்து கொள்வதைப் போலவே. உலக அறிவற்றவராக இருக்கும் தன் தந்தையை மகனும் நொந்து கொள்கிறான். எல்லாம் தெரிந்தவரைப் போல, வழி சொல்லி தவறான பாதையில் அழைத்துச் சென்றதற்காக நேரடியாகவே அறிவற்றவர் எனத் திட்டுகிறான். தன் மூலமாய் இந்த உலகுக்கு வந்த, தன் விரல் பிடித்து நடந்த, தன்னைவிட அதிக அறிவை அவன் பெற வேன்டுமென்று நினைத்த தன்னை, தன் மகனே அறிவற்றவன் எனத் திட்டும் போது அவரின் மனநிலை என்னவாக இருக்கும். இரந்து வாழும் நிலையிலுள்ள ஒரு பெண்ணின் முன் தன்னை அடித்ததற்காக மகன் தந்தையை வெறுக்கிறான். மகனின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டு தந்தை வெறுப்படைகிறார். இப்படி இருவரும் ஒருவர் மாற்றி ஒருவரை மனம் நோகச் செய்தாலும், வெறுத்தாலும் இருவருக்கும் மற்றவர் மீதிருக்கும் அன்பை தேடி அடைவதுதான் பெரும் பயணமோ?
தந்தைகள் மகன்களை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்துபவர்களாக மட்டுமல்ல, இந்த உலகையும் மகன்களுக்கு அறிமுகப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். தோல்பாவைக் கூத்தில் பாவையும் அதன் கயிறும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை, பாவையின் பிம்பத்தை மட்டுமே நாம் பார்ப்பதைப் போல, தந்தைகள் மறைமுகமாகவே இந்த உலகை கற்பிக்கிறார்கள். மதமிழந்த மகனுக்கு நெறிதவறாமல் மதத்தை காக்கும் தந்தை, சிற்றின்பங்களைத் தவிர்த்து உருவமற்றை ஏக இறைவனை பெரும்பயணத்தில் தரிசிக்கும் முறையைப் போதிக்கிறார். மிலன், துருக்கி, வெனிசு போன்ற நகரங்களைக் கடக்கும் போது, மகன் அந்த இடங்களை சுற்றிப்பார்க்க விரும்பும் போது நாம் சென்றடைய வேண்டியது மெக்காவிற்குத்தான், நாம் சுற்றுலாப் பயணிகள் அல்ல, புனிதப் பயணிகள் என்று வகுப்பெடுக்கிறார். இப்படி எதிரெதிர் திசைகளில் விலகி நிற்கும் தந்தையும் மகனும் ஒன்றினையும் ஏதோ ஒரு புள்ளியை நோக்கி பயணம் சென்று கொண்டேயிருக்கிறது.
உலகம் முழுக்க புனித தலங்களில் எல்லாம் ஒரேமாதிரிதான் இருக்கின்றன, கூட்டமும் நெரிசலுமாய். ‘கூடிய கூட்டங்கள் கடலா கடலலையா’ என்ற வரிகள் முருகனுக்கு மட்டுமல்ல கடவுள் என பெயரிடப்பட்ட எல்லா உருவத்துக்கும், உருவமற்றதற்கும் கூட பொருந்தும் போலிருக்கிறது. மெக்கா நகரை ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு நேரம் படம்பிடித்தது இதில்தானாம். இயக்குனர் Ismael Ferroukhiயின்  முதல் முழுநீளத் திரைப்படம் இதுதான். அவரும் படத்தில் வரும் தந்தையைப் போலவே மொராக்காவில் பிறந்து பிரான்சில் வாழ்ந்தவர். மத்திய கிழக்கில் வாழும் இசுலாமியர்களை, அவர்களது கலாச்சாரத்தைப் பேசும் உலகப்படங்கள் அங்கிருந்து வந்தவையாக இருந்த நிலையில், மேற்குலகில் வாழும் இசுலாமியர்களின் கலாச்சாரத்தை பதிவு செய்பவர்களில் முதன்மையானவராக இவர் திகழ்கிறார்கள்.