15.12.10

பாலஸ்தீனக் கவிதைகள்

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம், பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் - பிரடெரிக் எங்கெல்ஸ்
ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் மற்ற வல்லரசு/வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளாலும், இனவெறி/ஆதிக்க அரசுகளாலும் வதை பட்டுக் கொண்டிருக்கும் பல தேசிய இனங்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு இனத்தவன் கல்லெறிகிறான், இன்னொருவன் மதத்தின் தலைமையின் கீழ் செல்ல, மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடுகிறான், அதே மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடிக் கொண்டு அடக்குமுறையை காட்டுபவனிடம் தன்னாலியன்ற அத்தனை எதிர்ப்புகளையும் முள் வேலி முகாம்களுக்குள்ளிருந்து செய்கிறான். இன்னொரு இனமோ கண்ணுக்கு கண்ணையும் பல்லுக்கு பல்லையும் பிடுங்கிப்பார்த்தது, மக்களை ஒன்று கூட்டி ஓலமிட்டுப் பார்த்தது, கற்களை வீசிப்பார்த்தது. நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மனம் வந்தவர்களுக்கு ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. இன்னமும் மக்களைத் துடிப்புடன் வைத்திருக்க அம்மண்ணின் கவிஞர்கள் உதவியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

அம்மண்ணின் கவிஞர்களின் முக்கிய கவிதைகளை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். இன்று நேற்றல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. என்னை விட அதிக வயது கண்ட புத்தகம் இது. மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் புத்தகம் படித்த போது மஹ்மூத் தார்விஷ் பற்றி இணையத்தில் தேடினேன். அப்போது பலஸ்தீனக் கவிதைகள் என்ற இந்நூல் மின்நூலாகக் கிடைத்தது.
மஹ்மூத் தார்விஷ், பௌசி அல் அஸ்மர், ரஷீத் ஹூசைன், சலீம் ஜிப்றான், தௌபிக் சையத், அந்தொய்னா ஜபாறா, பத்வா துகான், சமீஹ் அல் காசிம், மூயின் பசைசோ ஆகிய ஒன்பது பாலஸ்தீனக் கவிகளின் கவிதைகள் இந்நூலில் தொகுத்திருக்கிறார்கள்.
மஹ்மூத் தார்வீஷின் கவிதைகளிலிருக்கும் எதிர்ப்பும் தீர்க்கமான வார்த்தைப் பயண்பாடுகளும் ஏற்கனவே அறிந்தவை தான் என்றாலும். தன் மீதும் தன் இனத்தின் மீதும் அடக்குமுறைக்கெதிராக இவருடைய பசியெடுத்த வாய்கள் கவிதைகளைப் பாடிச் செல்கின்றன. என் கண்களும், உதடுகளும், என்னுடைய தன்னுணர்வும் இருக்கும் வரை எதிரிக்கு எதிராக நின்று, விடுதலைக்கான போரை நான் பிரகடனம் செய்வேன், என்னும் இவருடைய கவிதைகள், அடக்கு முறைக்கெதிராக மட்டுமே காற்றில் கரைந்து செல்கிறது, கேட்கும் உள்ளங்களில் விடுதலைக் கான குமுறலை கொதித்தெழச் செய்யும் விடுதலைக் கீதங்கள் இவருடையவை. இத்தொகுப்பிலிருக்கும் நம்பிக்கை என்னும் இவருடைய கவிதை பாலஸ்தீன மண்ணுக்கு மட்டுமல்ல, போராடும் ஒவ்வொரு மண்ணுக்கும் தற்காலிகத் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கச் செய்யும் உற்சாகப் பாணத்திற்கு ஒப்பானது.
உனது பாத்திரத்தில் - இன்னும்
சிறிது தேன்
எஞ்சி உள்ளது.
ஈயைத் துரத்து
தேனைப் பேணு
என்கிறார் மஹ்மூத் தார்ஷ்வி. தேன் என்றும் கெட்டுவிடாது, ஆனால் ஈக்களுக்கு இறையாக்காமல் பின் வரும் சந்ததிக்கு பத்திரப்படுத்தச் சொல்லும் அளவுக்கு நம்பிக்கையை விதைத்துச் செல்கிறார். இவர் இறந்த பின்னும், பாலஸ்தீனத்தில் குண்டடி பட்டு இடிந்து வீழ்ந்துவிடாத வீட்டின் ஒவ்வொரு பாத்திரத்திலும் ஈக்கு இறையாக்காமல் தேன் மிச்சம் உள்ளதுதான். ஈக்கள் ஏவுகணை ஏறி வந்தபோதும், தேன் மிச்சம் இருக்கிறது.
எனது நண்பனைப் பற்றி
எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர்.
எப்படி அவன் சென்றான்
துப்பாக்கி வேட்டுக்கள்
அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின
தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம்.
நான் அவனது காயங்களைப் பார்த்தேன்
அதன் பரிமாணங்களைப் பார்த்தேன்
நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்
குழந்தையை இடுப்பில் ஏந்திய
ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே!
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்.
நான் போராடத் துணிந்தவன், ஏனெனில் நான் அரேபியன்என்று சொல்லும் பௌசி அல் அஸ்மாரின் கவிதைகளோ இன்னொரு வகையானவை. நான் என் ஆன்மாவை அடகு வைக்காத அராபியன் அதனால் தடுப்புக் காவலில் இருக்கிறேன் என்கிறார். அவருடைய நகரங்களிலும், வயல் வெளிகளிளும் வீசிச் சென்ற சுதந்திரக் காற்றை சுவாசித்தவர், அந்த சுதந்திரக் காற்றை மீண்டும் சுவாசிக்க தன் கவிதைகளை கூர் தீட்டியிருக்கிறார்.
சாத்தியமற்றதை
என்னிடம் கேளாதே
என் நண்பனே
என்னை என் நாட்டை
விட்டு போகுமாறு
உன்னால் கேட்க முடியாது
றஷீத் ஹூசைன், பாலஸ்தீனிய அரபுக் கவிதைகளில் அரசியலை புகுத்திய முன்னோடிகளில் முதலாமவர். அம்மக்களின் துயர நிலையைப் பாடும் இவர் கவிதைகள் தங்களுக்குள்ளிருக்கும் துரோகிகளையும் அதே நேரத்தில் சுட்டத்தவறுவதில்லை. இவருடைய கவிதைகள் கால, தேச வேறுபாடுகளைக் கடந்து ஒடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு இன மக்களையும் குறிப்பிட்டு பாடுகிறது.
இருண்ட கூடாரங்களில்
சங்கிலிகளில்
எனது மக்களை சிறையிட்டுள்ளனர்.
வாய் மூடி இரும் என ஆணையிட்டுள்ளனர்
அவர்களேதும் முறையிட்டால்
இராணுவச் சவுக்கால்
மரணத்தால்
பசியால்
அச்சுறுத்துகின்றனர்.
—————————————————————-


எங்கள் மத்தியில்,
இன்னும் ஒரு கும்பல்
எஞ்சியுள்ளது.
அவமானத்தை
அது சாப்பிடுகின்றது.
தலைகுனிந்து நடந்து செல்கின்றது.
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
நக்கும் ஒருவனை
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்.
சலீம் ஜிப்ரானுடய கவிதைகள் தன்ன்னை அடிக்க வருபவனை நோக்கி ஒரு கணம் ஒரேயொரு கணம் உன் முதுகைத் திரும்பிப் பார் என்று சொல்வதைப் போல் அமைந்திருக்கின்றன.
!
நாசி முகாம்களில் இறந்தோரின் ஆன்மாக்களே,
தூக்கில் தொங்கும் இம்மனிதன்
பெர்லினில் பிறந்த ஓர் யூதன் அல்ல
தொங்கும் இம்மனிதன்
என் போல் ஓர் அராபியன்.
உங்கள் சகோதரர்கள்
அவனைக் கொன்றனர்
சியோனில் வாழும்………..
உங்கள் நாசி நண்பர்கள்.
எங்கள் நம்பிக்கையை, எங்கள் போராட்டத்தை உன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது, எங்கள் தலைமுறைகள் போராடிக் கொண்டேயிருக்கும் நீ அடக்கும் வரை, எங்கள் பசி தீவிரமாகும் போது உன் பற்களுக்கிடையேயிருந்து கூட எங்களுக்கான உணவை நாங்கள் சேகரிப்போம், உன் மார்பின் மீது நாங்கள் ஒரு பெருங்சுவரைப் போல நீண்டு நிற்போம் என்னும் தௌபீக் சையதுவின் கவிதைகள் என்றென்றைக்கும் போராட்டத்தைத் உயிர்ப்போடு வைத்திருப்பவை.

ஊசித் துவாரத்துள் யானையைச் செலுத்தலாம்
பால்வீதியில் பொரித்தமீன் பிடிக்கலாம்
முதலையைக் கூட மனிதனாய் ஆக்கலாம்
இவையெல்லாம் உமக்கெளிது.

ஆயினும்
சுடர்விடும் எமது நம்பிக்கை ஒளியினை
துன்புறுத்தி அழிக்கவோ
எமது பயணத்தின் ஓர் அடியினைக் கூட
தடுத்துவிடுவதோ
உமக்கு சாத்தியமற்றது.

இங்கு நாங்கள் இரத்தம் சிந்துவோம்
இங்கு எமக்கோர் பழைமை இருந்தது
எதிர்காலம் ஒன்றும்
இங்கெமக்குள்ளது
வெல்ல முடியாதவர் இங்கு நாங்களே

ஆகவே
எனது வேர்களே!
ஆழச் செல்க, ஆழச் செல்க!
எத்தனை நம்பிக்கையை இவருடைய கவிதைகள் விதைத்துப் போகிறது. மூவாயிரம் மைல்கள் தொலைவிலிருப்பவர்களுக்கு நம்பிக்கையை விதைக்குமானால் களத்திருந்தவர்களுக்கு எத்தனை உற்சாகத்தைத் தந்திருக்கும்.

அடக்குமுறைக்கெதிராக கொதித்தெழும் ஒவ்வொரு மனித மனமும் பறந்து சென்று இந்தப் பாலஸ்தீனக் கவிகளோடு சேர்ந்துகொள்ளவேச் செய்யும், அத்தனை வீரியமான வார்த்தைகளை இட்டு நிரப்பிய வெடிகுண்டுகளைப் போன்ற கவிதைகளைச் சமைக்கும் இவர்களது வார்த்தைகள் அடிமை விலங்குகளை அரித்தெடுக்கும் அமிலங்களாக பொங்கிக் கொண்டேயிருக்கின்றன.
நீங்கள் எங்களுக்கு காயங்களைத் தந்த போதும், எங்கள் எலும்புகளை நொறுக்கிய போதும், நாங்கள் உங்களுக்கு எங்கள் நாட்டின் ரோஜாப்பூக்களையும் எங்கள் இசையை உங்களுக்கு இசைத்து காட்டவும் வந்துள்ளோம். ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்டபோதும் பொறுமை காத்த நாங்களே உயர்ந்தவர்கள், அந்த பூக்களும், இசையும் எங்களுக்கு சொந்தமானவையே, நாங்கள் காதலுடனும் அன்புடனும் பேசுவது இதுவே இறுதி முறை, என்று தங்கள் போராட்டம் அடுத்த கட்டமாக ஆயுதத்தை நோக்கித் திரும்பப்போவதை ஒரு போர் பிரகடணமாகவே ஒரு கவிஞர் போர்பறையை அறைகிறார். அவர், அந்தோய்னா ஜபாறா.

இந்தியப் பெண்களை மதமும் அதன் மாயக்கரங்களும், சமையலறைக்குள் கட்டிபோட்டுவிட்டன, மதத்தின் மாயக்கரங்களைப் பின்னிருந்து இயக்கிக் கொண்டிருப்பவை ஆணின் அடிமனத்திலிருக்கும் அகோரப்பசி என்றால் மிகையாகாது, அங்கே, போராட்டம், பெண்ணின் புர்க்காக்குள்ளிலிருந்து வார்த்தைகளை வெளியே கொட்ட வைக்கிறது. இந்த வார்த்தைகள் இருபது ராணுவ வீரர்களுக்குச் சமமானது என்று எதிரியே பயந்தும், வியந்தும் பேசுகிற அளவுக்கு வீரியமான வார்த்தைகளை பத்வா துகானின் கவிதைகள் வீசிச் செல்கிறது. அவருடைய மூன்று கவிதைகள் இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
சிதைவுகளிலிருந்து
சித்திரவதையிலிருந்து
ரத்தம் உறைந்த சுவர்களிலிருந்து
வாழ்வினுடைய
மரணத்தினுடைய
நடுக்கங்களிலிருந்து
புதிய வாழ்க்கை ஒன்று கிளர்ந்தெழவேச் செய்யும்
நம்பிக்கையை தன் மக்களுக்கு விதைத்துச் செல்லும் போதே, தங்களின் வலிமையைச் சொல்லி அந்த வலிமையை எதிரிக்கும் உணர்த்துகிறார்.
அராபிய வேர்கள் இறப்பதே இல்லை
அவை பாறைகளைத் துளைத்து
ஆழமாய்ச் செல்பவை
ஆழ நிலத்திலே
தம் வழியினை கண்டறிபவை
அவை
போராடுபவனை மனிதனாகவும், ஒடுக்குபவனை மனிதகுலத்தின் எதிரியாகவும் சித்தரித்து புதிய விடியல்களை படைக்க அழைக்கும் கவிதைகளைப் பாடிச் செல்கிறார் சமீஹ் அல் காசிம்.
வாழ்க்கையின் சிறப்பு -என்
சிறையிலேயே பிறக்கிறதென்று
நான் நம்புகிறேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வௌவாலாய்
இருக்காதென்று நான் நம்புகிறேன் அம்மா.
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்
என்று சிறையிலிருந்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார், அவருடைய சிறப்பான கவிதைகள் பலவும் சிறையிலேயே எழுதப்பட்டவை.
தன் இனத்தின் ரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும் போது மௌனம் காத்த இந்த உலகையே ஒட்டுமொத்தமாய் சபிக்கும் ஒரு அராபிய கவிஞனின் வார்த்தைகள் உண்மையில் இதயமுள்ளோரை வாட்டவேச் செய்யும்.
நாங்கள் முள் கம்பியின் மீது
கிடக்கும் வரைக்கும்
இந்த உலகின்
தலையணையின் கீழ்
டைனமைட்ஒன்றை நாம் பொருத்தி வைப்போம்
என்று சபிக்கும் நேரத்திலே, உண்மையான மனித மனத்தை, அதன் இயல்பையும் சுட்டிக்காட்டி மனிதனாக மாறுங்கள் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
உலகின் ஆண்களே,
உலகின் பெண்களெ,
இப்போது நீங்களெம்முடன் இருங்கள்
மனிதனுக்குரிய கௌரவம் என்பதை
நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம்
மனிதன் என்ற பெயரின் மதிப்பை
நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம்
இப்படி ஒட்டுமொத்த மனித இனத்தையும் அதன் மௌனத்தையும் குலைத்துப் போடும் இந்த குரலுக்குச் சொந்தக்காரர் மூயின் பசைசோ
உண்மையில் ஒரு தேசம், மத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, வேறு எந்த பெயரால், அமைப்பால் அடக்கப்பட்டு கிடந்தாலோ, அடிமை விலங்கை இன்னும் தரித்துக் கொண்டிருந்தாலும், இந்த உலகின் எழுநூறு கோடி மனிதனுள் ஒருவனாவது அடிமை விலங்கை சுமந்து கொண்டு சுதந்திரக் காற்றுக்காய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கவும் நாம் விட்டால், நம்மை நாம் மனிதன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருந்து விட முடியும்? “பரந்து கெடுக உலகியற்றியான்என்றான் வள்ளுவன், பரந்து கெடுக இவ்வுலகு என்பது பொருத்தமாய் இருக்கும், ஒரு மனிதன் அடிமை விலங்கோடு இருக்கும் போது.
எனது பேப்பரும், பேனாவும், எனது வீட்டின் இடிந்த சுவரின் கல்லும் என்னை எதிர்த்து நில்என்று சொல்கிறது என்கிறார் மூயின் பசைசோ. எத்தனை எளிமையான வார்த்தை எதிர்த்து நில், என்பது ஆனால், வீரியமான வார்த்தை. இந்த வார்த்தைக்குள் தான் அடக்குமுறைக்கெதிராய் நிற்கும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு தனி மனிதனையும் சுவாசிக்கச் செய்து கொண்டிருப்பது, அடக்குமுறையிலிருந்து மீண்ட ஒவ்வொரு தேசத்தையும் அடிமை விலங்கை உடைத்தெறியச் செய்தது.

10.12.10

மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்

கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும்
ரேடார்களையும் ஏவுகணைகளையும் மீறி
உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும்
எந்த ஒரு விமான தளத்திலும் அது வந்து
இறங்குவதை தடை செய்ய முடியாது, தடுக்க முடியாது
ஏனெனில் சொல் என்பது ஒரு பறவை
நுழைவுச் சீட்டுத் தேவையில்லை அதற்கு
~ நபில் ஜனாபி
(ஈராக்கைச் சேர்ந்த கவிஞர். மேலே உள்ள கவிதையை குர்திஸ்தான் சுதந்திர தினத்தன்று அவ்விழாவில் பாடியதற்காகவும், அவ்விழாவில் கலந்து கொண்டதற்காகவும் தன் நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்.)
அணுகுண்டோ ஒரு முறைதான் வெடிக்கும்; புத்தகங்களோ திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் தன்மையுடையது. என்பது யாரோ எப்போதோ சொன்னது. எல்லா புத்தகங்களும் இப்படி திறக்கும் போதெல்லாம் வெடிப்பவையல்ல, சில புத்தகங்கள் அப்படிப்பட்டவை. அப்படி திறக்கும் போதெல்லாம் வெடிக்கக்கூடிய புத்தகங்களிலொன்று என் கைகளில் இப்போது இருக்கிறது. அது, மண்ணும் சொல்லும் - மூன்றாம் உலகக் கவிதைகள். எஸ்.வி.ராஜதுரையும், .கீதாவும் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்த பல கவிதைகள் அடங்கிய புத்தகம்.


மூன்றாம் உலகக் கவிதைகள் என்றதுமே, இந்நூல் எத்தகைய கவிதைகளைக் கொண்டது என்பது புரிந்திருக்கும். இக்கவிதைகள், அடக்குமுறைக்கெதிரான கவிதைகளையும், அடிமைத்தனத்தின் கீழான நிலையையும், அதை எதிர்க்கும் வல்லமையையும், சமூக நீதிக்கான போராட்டங்களையும் உரக்க எதிரொலிக்கும் எதிர்ப்பின் கவிதைகள்.
எதிர்ப்பைப் பற்றிய கவிதைகள் எதிர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேலானதாக இருக்க வேண்டும். என்ற மஹ்மூத் தார்விஷின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்நூலின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. அத்தகைய கவிதைகள் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கின்றன. போராளிகள், புரட்சியாளர்கள், சிறைக் கைதிகள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்டவர்களுடைய கவிதைகள். ஆகத் தெரிந்த சே குவேரா முதல் பெயர் தெரியாத அடக்குமுறைக்கு எதிராக தன் சொற்களை உதித்த சிறைக்கைதிகள் வரை எல்லோருடைய எதிர்ப்பின் சொற்களும் கவிதைகளாக இந்நூல் முழுதும் கொட்டிக் கிடக்கிறது.
கவிதையின் சிறப்பு அதன் இலக்கணத்தையும், அமைப்பையும் விட அதன் பொருளில் தான் இருக்கிறது, அதன் தீவிரத்தில் தான் இருக்கிறது (என்னுடையவை அப்படிப்பட்டவையல்ல, அவை கவிதைகளே அல்ல) என்ற என்னுடைய கருத்தாக்கத்துக்கு நெருங்கி வரும் கவிதைகள் பலவும் சொற்களாய், அம்மண்ணையும், அம்மண்ணின் வரலாற்றையும் சொல்கிறது.
இடஒதுக்கீடுக்கெதிராய் குறுக்குக் கயிறு போட்டு குறுக்கே நின்ற பார்ப்பனர்களையும், அந்தப் பார்ப்பனீயத்தில் திளைத்தவர்களையும் எதிர்த்த ஒரு போராளியின் கவிதையும் இந்நூலில் இருக்கிறது. (அக்கவிதையை எழுதியவர் வரவர ராவ்)
அம்மா,
என் முடியை வளர விடு,
அதை வெட்டாதே
கிளைகள்
வெட்டப்பட்ட மரம்
பாடும் பறவைகளுக்கு உகந்தது அல்ல
என்று ஆஃப்காணிஸ்தானின் பழங்குடிகளிடம் பாடப்பட்டுவரும், பெண்ணியக் கவிதையும் இந்நூலில் இருக்கிறது.
ஏலாரான் - துட்டகமுனு சண்டை!
துட்டகமுனுவுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி
ஒரு யானையின் முதுகில் ஏலாரனின் பிணம்
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
கைத்தட்டுதல் நாசமாய் போக!
அந்த பெயருக்கு
ஒரேஒரு … கண்ணீர் துளியை
வழங்கப் போவது யார்?
அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்…!
இக்கவிதைக்குச் சொந்தக்காரர், சிங்களரான பராக்ரமு கொடித்துவக்கு.
புர்க்காக்களுக்குள்ளிலிருந்து பெண்ணியக் குரலெழுப்பாமல், அந்தப் புர்க்காக்களைக் கிழித்தெறிந்துவிட்டு குரலெழுப்பும் இஸ்லாமிய பெண்கவிகளின் கவிதைகளும் இருக்கிறது.
இஸ்லாமிய கட்டுப்பெட்டித்தன ஆனாதிக்க அடாவடிக் கோட்பாடுகளைக் கொண்ட அத்தனை புனித நூல்களையும் கேள்விக்குள்ளாகும் சயீதா கஸ்தர் என்னும் பாக்கிஸ்தானிய பெண்ணியப் போராளியின் கவிதையும் இருக்கிறது.
கிஷ்வர் நஹீத், என்னும் இன்னொரு பாக்கிஸ்தானிய பெண் கவியின் குரலோ முந்தையதுக்கு மாறானது ஆனால், தீர்க்கமானது.
ஒரு ஆடுகுதிரையின் மீது
ஒரு குழந்தை ஆடுகிறது
அது மரக் குதிரை
குழந்தையின் ஸ்பரிசம் அறியாதது
குழந்தை குதிரையை அடிக்கிறான்
தனது திறமையைக் கண்டு
தன்னையே மெச்சிக் கொள்கிறான்
அவன் வளர்ந்து பெரியவனாகிறான்
மரக்குதிரையில் மீண்டும் சவாரி செய்கிறான்
ஒரு சடங்கின் மூலம்
தன் இளமையை அறிவிக்கிறான்.
இரவு கழிந்ததும்
குதிரை உரு மாறுகிறது
குதிரையை அடிப்பவன்
தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறவன்
மாறாமலேயே இருக்கிறான்:
எஜமானனாக
சவாரி செய்பவனாக
கணவனாக
அரபு நாடுகளுக்கிடையே, நல்லுறவை நாடும் கவிதைகள், நாஜிக்களின் முகாம்களிலிருந்து சவப்பெட்டியினுள் பினத்தோடு தப்பித்த ஒரு யூதனின் கவிதை, அந்த நாஜிக்கூடங்களிலிருந்து தப்பித்து, மதத்தின் பெயரால், மதத்தின் புனிதப் பெயரால் வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட பசி கொண்ட பாலஸ்தீனியக் கவியின் கவிதை ஒன்று,
நான் பசியால் துடிக்கும் போது
எனது மண்னை அபகரித்தவர்களின் சதையை
விழுங்குபவன் நான்
அச்சம் கொள்
எனது பசியைக் கண்டு.
நிற வெறிக்கெதிராய் போராடிய கறுப்பு பேனாக்கள் கவி வடிக்கின்றன.
வெள்ளை நிறமோ விசேட நாட்களுக்குரியது
கறுப்பு நிறமோ ஒவ்வொரு நாளுக்கும்
சொற்கள் ஏ.கே 47களாக வேண்டும்
சொற்கள் எப்போதும் போரட வேண்டும்
நடு இரவில் திரும்பி பார்க்காமல் விட்டுப்போன, புத்தனின் மனைவி யசோதராவைக் கேட்கும் பெண் கவிகளும், மரியத்தையும், பாத்திமாவையும் கேள்வி கேட்கும் பெண் கவிகள், முந்தைய சகோதர தேசமும், இன்றைய எதிரி தேசங்களுமான அண்டை நாடுகளைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒன்றைப் போலவே கேட்கிறார்கள் கேள்விகளாய், ஆணாதிக்கவாதிகளை. அது புத்தனாக இருந்தாலும் சரி நபியாக இருந்தாலும் சரி

இன்றைய இந்துத்துவ சோதனைக் களத்தின் மைந்தன் ஒருவனுடைய ஆர்யகுமாரனனின் பிரேதப் பரிசோதனைக்கவிதை பாடிச் செல்கிறது இப்படி,
அவனது
தோலை உரித்த போது
தங்கத் தகடு ஒன்றும் கிடைக்க வில்லை
அவனது
பெரும் தொப்பையிலிருந்து
நவமணிகளை எதுவும் எடுக்கவில்லை
(வாழ்நாள் முழுதும் அவன் இவற்றை உண்டதாகச் சொல்லப்பட்ட போதும்)
அவனது
நஞ்சேறிய இதயத்தில்
புணிதச் செயல்கள் ஈட்டிய அமுதத்தைக் காண முடியவில்லை
ஓர் ஓநாயின் அழகான இதயமே
சூலம் போன்ற கோரைப் பற்கள்
அழகிய கண்களில் முதலைக் கண்ணீர்
ஆசார நாளங்களில் உறைந்து போன சாரயம்
ஆம்
இதுதான்
பாடம் போட்டு வைக்கப்பட்ட
ஓர் ஆரிய குமாரனனின் பிரேத பரிசோதனை அறிக்கை
(நீரவ் பட்டேலுடைய கவிதையின் சுருக்க வடிவம்)
இப்படி நூல் முழுக்க, மஹ்மூத் தார்விஷின் வரிகளின் படியமைந்த கவிதைகளே, அந்த மண்ணையும், மக்களையும் சொற்களாய் விவரிக்கின்றன
இந்நூலின் ஒரு குறையாக நான் காண்பது, கவிதைகளுக்கெண் கொடுத்து பட்டியலிடாமலும், பொருளடக்கம் இல்லாமல் இருப்பதும் தான்.
நூல் : மண்ணும் சொல்லும் மூன்றாம் உலக கவிதைகள்
வகை : கவிதைத் தொகுப்பு
தமிழாக்கம் : எஸ்.வி.ராஜதுரை & .கீதா
விலை : ரூ.115
பதிப்பகம் : அடையாளம்

25.11.10

வரலாறு மாற்றுப்பாதையிலேயே திரும்பும்…

தனநந்தன், நந்த வம்சத்தின் கடைசி அரசன். இவனைக் கலகம் செய்து தோற்கடித்தே சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக்கு வந்து, மௌரியர்கள் சாம்ராஜ்யத்தை அமைத்தான்.
பெயருக்கேற்றார் போல, ஏராளமான செல்வத்தைத் தானே குவித்து வைத்திருந்தான், அன்றைய அம்பானிபோல பெரிய மாளிகையில் வாசம், ஏராளமான பொன், பொருள் என்று வரலாறு இவனைப் பற்றி பதிவு செய்து வைத்திருக்கிறது. பிராமணர்களுக்கு தாணமளிப்பது இல்லை, யாகம், வேள்வி எதுவுமில்லை. இதனாலேயே கூட இவனிடம் இத்தனை செல்வம் சேர்ந்து இருக்கலாம் என்பது என் கணிப்பு. கூடவே, நந்த வம்சத்தவர்களுடைய பரம்பரையில் ஒரு சந்தேகம் இருக்கிறது, அவர்கள் சத்திரியர்கள் அல்ல என்பதுதான் அது. கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள். தாழ்ந்த குலம் எனப் பலவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.

இவ்விரு காரணங்களாலும், அன்றைய பார்ப்பனர்கள் நந்த வம்ச அரசர்களது மீது ஆரம்பத்திலிருந்தே பொருமிக் கொண்டிருந்தார்கள். யாகம், வேள்வி இல்லாததால் வருமாணம் இல்லை. கீழ்ச்சாதியைச் சேர்ந்த பயல்கள் அரசாள்வதா? எல்லாவற்றுக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இத்தனைச் செல்வத்தை ஒருவனே குவித்து வைத்திருக்கும்படி ஒருவன் வந்ததும் மக்களிடமும் வெறுப்பு தோன்றியது.
சாணக்கியன் / கௌடில்யன் / விஷ்ணுகுப்தன் என்ற பெயரில் ஒரு பார்ப்பணன், சந்திர குப்த மௌரியன் என்ற ஒரு வீரண் இருவரும் கைகோர்த்தார்கள்.
அலெக்சாண்டர், சிந்து நதிக்கரையின் ஓரமாய் வந்து காத்திருந்த நேரம், இந்தியப் பகுதிகளை விழுங்க. சாணக்கியனும், சந்திர குப்த மௌரியனும், நந்தர்களை வீழ்த்த அவனிடம் உதவி கேட்டு ஓடினார்கள். துரத்தியணுப்பிவிட்டான். அலெக்சாண்டர் மீது வெறுப்போடு கிளம்பினார்கள் இருவரும். தனநந்தனை கவிழ்த்தார்கள். மௌரிய சாம்ராஜ்யம் துவங்கியது. (அலெக்சாண்டர் இறந்தபிறகு, அலெக்சாண்டரது படைகளோடு போரிட்டு அவர் கைப்பற்றிய பல பகுதிகளையும் தன்னுடைய பேரரசோடு இணைத்துக் கொண்டான் சந்திரகுப்த மௌரியன்.)
இங்கே, கவணிக்க வேண்டிய இன்னொரு தகவல். சந்திர குப்த மௌரியனுக்கும் ஒரு கதை இருக்கிறது, அவனும் சத்திரியன் இல்லை. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனே. அவனுடைய வம்சவழியின் முன்னோர்கள் மீதும் பல கதைகள், தாழ்ந்தகுலத்தைச் சேர்ந்த தாய். மலைக்குடி வம்சம் என பல கட்டுக்கதைகள். எது உண்மையாய் இருந்த போதும், வருணாசிரம தர்மம் கெட்டது.
தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொண்டு நந்தர்களை வீழ்த்த ஏன் சாணக்கியன் முன்வந்தான். மீண்டும் சந்தேகங்கள் சாணக்கியன் என ஒருவன் இருந்தானா? அவனே எழுதியதாகச் சொல்லப்படும் அர்த்தசாஸ்திரத்தில் பல அமைச்சர்களுடைய பெயரைக் குறிப்பிட்ட போதும், தலைமை அமைச்சரான அவன் பெயரை ஏன் விட்டான்? மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சாணக்கியனின் பெயர் எங்கேயும் குறிப்பிடப் படவில்லையே ஏன்? இப்படி சாணக்கியனின் இருப்பின் மீதே சந்தேகங்கள். (அன்றைய நாளில் படைப்பின் கர்த்தா, தன் பெயரை குறிப்பிடாதது மரபாக இருந்தது. மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சிலவே கிடைத்திருக்கிறது. போன்ற காரனங்கள் சொல்லப்பட்டாலும், சாணக்கியனின் இருப்பின் மீதான சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது.)
நந்தர்களை எந்த காரணத்துக்காக பிராமணர்கள் எதிர்த்தார்களோ, அதே காரணத்துக்காக தன்னையும் எதிர்ப்பார்கள், இன்னுமொரு கலகத்தை விளைவித்து தன்னையும் தூக்கியெறிவார்கள், என்ற பயம் இருந்தது. சுற்றி மெய்க்காப்பாளர்கள், அத்தனை பேரும் பெண்கள். நாடு முழுக்க அத்தனை ஒற்றர்கள், பகலில் காக்கைகளைப் போலவும், இரவில் ஆந்தையைப் போலவும் ஒற்றர்கள் தங்கள் வேலையைச் செய்தார்கள். இரவிலும் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்கியிருந்திருப்பான் சந்திரகுப்த மௌரியன்.
அவன் நினைத்தற்கேற்றபடி பிராமணர்கள் மௌரியர்கள் மீதும் அதே பொருமலோடு இருந்தார்கள். இடையில் சந்திரகுப்தன் சமணனாக மாறி தக்காணத்துக்கு சமணத்துறவி பத்ரபாகுவோடு வந்துவிட்டதாகவும் வரலாறு சொல்கிறது. அசோகர் பௌத்தத்துக்கு மாறியதும் எல்லோரும் அறிந்ததே. பிற்கால மௌரியர்களும் அடிக்கடி சமணத்துக்கும், பௌத்தத்துக்கும் மாறி மாறி விளையாடிக்கொண்டேயிருந்தார்கள். மீண்டுமொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்கள், பிராமணர்கள்.
பிரஹதத்தன் என்னுமொரு பலமில்லாத ஒருவன் மௌரிய குலத்தில் வந்திருந்தான், அரசனாகவும் இருந்தான். புஷ்யமித்ரசுங்கன் என்னும் படைத்தளபதி பிரஹதத்தனை வெட்டிக் கொண்றான். மௌரிய வம்சம், கீழ்க்குலத்தோர் வம்சம் முடிந்தது. வர்ணாசிரமம் மீண்டும் உயிர்விட்டது. மௌரியர்கள் முடிந்தார்கள், சுங்கர்கள் வந்தார்கள். பௌத்தம் கீழ்நிலைக்கு வந்தது, வைதீக ஆட்சி மீண்டும் வந்தது.
வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால், அது மீண்டும் அதே பாதையிலேயே திரும்பாது, மேம்பட்ட வேறொரு பாதையிலோ அல்லது பிற்போக்கான பாதையிலோ, முந்தையதிலிருந்து முற்றிலும் மாறுபட்டே திரும்பி நிற்கும்.
புஷ்யமித்ர சுங்கன் தோற்றுவித்த சுங்க வம்சத்தின் கடைசி அரசன், தேவபூபதி, அவனுடைய பிராமன அமைச்சர், வாசுதேவ கண்வர். அவனைக்  கொண்று வாசுதேவ  கண்வர், கண்வர்  வம்ச அரசைத் தோற்றுவித்தார்.
வரலாற்றின் (திரும்பும்) பாதையை பிராமணர்களே அன்றிலிருந்து தீர்மாணித்து வந்திருக்கிறார்கள்.
ஆதாரங்கள்:
  1. an advanced history of india- RC Majumdar, HC Raychaudhri, Kaikinkar Datta
  2. இந்திய வரலாறு – டாக்டர் ந.சுப்ரமண்யன்
  3. இந்திய வரலாறு பாகம் 1 –  பேராசிரியர். கோ.தங்கவேலு

15.11.10

சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்


மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமான டி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே 2010ல்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்திருக்கிறது.
பதினேழு முறை தோற்றவன், இறுதியாக வென்றான்,” “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிஎன்றெல்லாம் வியாக்கியானம் பேச எல்லாராலும் மேற்கோள் காட்டப்படும் முகமது கஜினியின் வரலாறே திரிக்கப்பட்டுத் தான் இப்படி வியாக்கியானம் பேசத் தகுதியான கதையாக உருமாறியிருக்கிறது. இப்படிச் சொல்லப்படும் கதையெல்லாம், வரலாறு தெரியாதவர்களால் ஊதிவிடப்பட்டதென்று ஒதுக்கிவிடலாம். ஆனால், நீங்கள் சொல்லும் வரலாறு ஊதி பெரிதாக்கப்பட்டது தானென்று ஒரு குரல் கேட்கும் போது அதைக் கூர்ந்து கவணிப்பது அவசியமானது தானே?
சோமநாதர் கோயில் கஜினியின் முகமதுவால் இடிக்கப்பட்டது என்பதிலிருந்து நேரெதிராக இரு சக்திகளை முன்னிறுத்தும் வகைப்பட்ட வரலாறு இந்தியாவில் துவங்குகிறது. இந்து-முஸ்லீம் வெறுப்புணர்வின் அடிநாதத்தைத் தேடிக் கொண்டே போனால், அது கோயில்களை இடித்து தங்கள் மத வழிபாட்டு நிலையங்களை மேம்படுத்தினார்கள், மதத்தை அழித்தார்கள், என்ற குற்றச்சாட்டிலேயே போய் நிற்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நேற்றைய நீதி மன்ற தீர்ப்பு வரை நீளும் பிரச்சினைதான் இது. நீரோடைக்கு அடியில் இருக்கும் பிரச்னை இது, பல குட்டைகளையும் போட்டு குழப்பியதில் தெளிவாக பார்க்க முடியாமல், மேலே குழம்பியை ஒரு சகதியை மட்டும் நாம் பார்த்துக் கொண்டு, காசுமீர் பிரச்னையா, அதோ அந்தாண்டை இருந்து பாகிஸ்தான் காரன் கல்லு குடுக்குறான்யா என டீக்கடைகளில் பெஞ்சை தேய்த்துவிட்டு டீயை காலி செய்துவிட்டு போய்விடுகிறொம். பிரச்னையின் ஆணிவேர் துவங்கிய சோமநாதர் கோயில் இடிப்பின் வரலாறும் கதையும் இந்நூலில் (உரையில்) சொல்லிச் செல்கிறார் ரூமில தாப்பர்.
இந்நூலைத் துவங்கும் போது, கோவில் கொள்ளயடிக்கப்பட்டதற்கு முன்பு அங்கு நிலவிய சூழல், அன்றய சமூக அமைப்பு , போன்ற பலவற்றையும் சுட்டிக்காட்டி, இந்த ஆய்வை முன்னெடுக்க தான் எடுத்துக்கொள்ளும் சாட்சியங்களையும், சொல்லி அப்படியே, அந்தச் சான்றுகளில் உள்ளவற்றையும், அச்சான்றுகளின் நம்பகத்தன்மையையும், விளக்கிக் கொண்டே சென்று உச்சநிலையாக, மேற்கண்ட சான்றுகளிலிருந்து எவ்வாறு மதச்சார்பற்றத் தன்மை உடைக்கப்பட்டது என்பதையும், மத வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டதையும் கூறுகிறார்.
அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஐந்து வகையான சான்றுகள்,
  1. துருக்கிய-பாரசீகச் சான்றுகள்
  2. முகமது காலத்திய சமணச் சான்றுகள்
  3. சோமநாதபுரத்திலுள்ள் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்
  4. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த விவாதங்கள்
  5. தேசிய வாதிகளின் பார்வைகள்
இந்த ஐந்து வகைச் சான்றுகளில் இருந்து, ஒவ்வொன்றையும், விளக்கி, கஜினியின் முகம்மது சோமநாதர் ஆலய கொள்ளை மற்றும் சிலை உடைப்பால் மட்டுமே இஸ்லாத்தின் வெற்றியாளராக கருதப்படவில்லை என்பதையும், அன்றைய நாளிலிருந்து இன்று வரைத் தொடரும் ஷியா-சன்னி உள்ளடிச் சண்டைகளில் முகம்மதுவின் நிலைப்பாட்டாலும், அன்றைய குதிரை வணிகத்துக்கும் உள்ள தொடர்பினாலும் ஆதிக்கப் போட்டியுமே முகம்மதுவை இஸ்லாத்தின் வெற்றியாளராக நிலைத்திருக்கச் செய்யும் காரணங்களென்றும் விளக்குகிறார்.
சோமநாதபுரக் கோயில் முகம்மதுவால் மட்டுமல்ல, அன்றைய உள்நாட்டு அரசர்களாலும், கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டதற்கான சான்றுகளின் குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகிறார். சோமநாதபுரக் கோயில் வெறும் கோயிலாக மட்டுமில்லாமல், அன்றைய அதிகார குவிப்பிடமாகவும், மையமாகவும் விளங்கியதால்தான் அன்றைய நாளில் உள்நாட்டவர் பலராலும் தாக்கப்பட்டதாகவும் இவர் சொல்கிற கருத்தை ஏற்காமல் இருக்க முடியாது. அன்றைய சைவ-சமண, சிவன்-மகாவீரர் போட்டிகளின் நிலையையும் ஒருவர் மீதான மற்றொருவரின் வெற்றிகள் கூறும் வேறொரு வகையான வரலாற்றுக்கதையையும் சமணச்சான்றுகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.
சோமநாதபுரத்திலுள்ள சமஸ்கிருத மொழியிலுள்ள கல்வெட்டு ஒன்று, கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிறுபகுதி, ஒரு மசூதி கட்டுவதற்காக தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணமாக விளங்குகிறது, சமஸ்கிருதத்திலும் அரபிய மொழியிலுமாக இந்த கல்வெட்டுகள் உள்ளன, கோவில் இடிப்புச் சம்பவத்தின் இருநூறு ஆண்டுகளில் இந்நிகழ்வு நடந்துள்ளது, அன்று மதச் சகிப்புத்தன்மை அந்தளவுக்கா இருந்தது? இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லையா? ரூமிலாவே விடையுமளிக்கிறார். இந்தக் கொள்ளை சம்பவம் பற்றி இன்று என்ன கொள்கைகள் நிலவுகிறதோ அதற்கு நேர்மாறானவை அன்று நிலவியிருக்கிறதென்பதை, அன்றைய வரலாறு சொல்கிறது என்கிறார்.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தின் மீதான இந்துமத வெற்றியாக, (முன்னொரு காலத்திலோ, நீங்கள் தோற்றவர்கள், என்பதைச் சொல்லாமல் சொல்வதாகவும்) ஆப்கன் படையெடுப்பின் போது, சோமநாதபுரக் கோயிலிலிருந்து பெயர்த்தெடுத்துச் செல்லப்படாததாக கருதப்பட்ட கதவை, முகம்மதுவின் கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்து வருவது, அன்றைய கம்பெனியாரின் நோக்கமாக இருந்து வந்ததையும், கதவு எடுத்து வந்த பிறகுதான், அதில் துளியும் இந்தியத்தன்மை இல்லாததும், எகிப்திய தனமைகள் மிகுந்திருந்ததும், கதவு பற்றியது கட்டுக்கதையே என்றும் சொல்கிறார். இவை பிரிட்டீஷ் நாடாளுமன்ற விவாத ஆவணங்களிலிருந்து பெறப்பட்டிருக்கும் தகவல். இந்து-முஸ்லீம் துவேஷத்திற்கு தூபம் போட, மீண்டும் முகம்மதுவின் கொள்ளை கிளறப்பட்டதை தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.
மீண்டும் சோமநாதர் ஆலயம் அரசு சார்பாக புதுப்பிக்கப்படுவதும், அரச பிரதிநிதிகள் அவ்விழாவில் கலந்து கொள்வது, மதச்சார்பற்ற தன்மைக்கு குந்தகத்தையும், மதத் துவேஷத்தையுமே வளர்க்கும், அது இந்து தேசிய உணர்ச்சியின் வளர்ச்சிக்கே உதவுமென்ற கருத்து கொண்டிருந்த நேருவின் கொள்கைக்கும் மற்ற இந்து தேசியவாதிகளுக்குமான முரண்பாட்டை ஐந்தாவது வகை ஆதாரமாகக் கொண்டு, மதப்பூசல்களுக்காக கிளறப்படுவதையும் விளக்குகிறார்.
ஒருநிகழ்வு, பலவேறு விதமான ஆதாரங்களையும் கட்டுக்கதைகளையும் கொண்டு விளங்குவது, உண்மையான வரலாற்றுக்கு நம்மை இட்டுச் செல்லாமல், ஒவ்வொருவரும் தான் எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ, அதை நோக்கிய முன் முடிவோடே செல்லும் நிலையை கொண்டு செல்லும் என்பதையும், அது என்றுமே வரலாற்றைப் படிப்பதற்கான சரியான அனுகுமுறை அல்லவென்பதையும் விளக்குகிறார்.
சோமநாதபுரக் கோவில் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு நூல் ஒன்றை ரூமிலா தாப்பரே எழுதியிருக்கிறார், கிடைத்தால் அதையும் படிக்க வேண்டும்.

8.10.10

The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்

எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ்
விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை. இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த மண்ணை ஒரு இனம் மீட்கவில்லையா? தோல்விகள் வெற்றியை நோக்கிய போராட்டங்களை ஒத்திப் போட்டிருக்கிறதேயொழிய, முடக்கி விடவில்லை. ரஷ்யாவில் 1905ல் என்ன நடந்தது? க்யூபாவில் ஜூலை 26 இயக்கம் எதைச் சொன்னது?

ஒவ்வொரு போராட்ட வடிவமும் அடக்கப்படும் போது, இன்னொரு வடிவம் பிறக்கிறது. அந்த வடிவம் தோற்றுப் போனால் இன்னுமொரு வடிவம். காலம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கற்களைக் கொண்டு வேட்டையாடிய சமுதாயம், இன்று ஏவுகனைகளைக் கொண்டு அணு ஆயுதங்களால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அன்று மக்கள் சண்டையிட்டார்கள், இன்று அரசாங்கம் போர் செய்கிறது. அன்று தொட்டு இன்றுவரை ஆதிக்க வெறி இருந்துதான் வருகிறது, அன்றிலிருந்து எதிர்ப்பும் இருந்தே வருகிறது. எதிர்ப்பின் வடிவங்களில் மாற்றம் மட்டுமேயிருக்கிறது, எதிர்ப்பேயில்லாமல் போனதில்லை. ஆதிக்கம் இருக்கும் வரை அதை எதிர்க்கும் கலகக் குரல்களும் இருந்தே தீரும்.
இவையெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களை புரட்டும் போது கிடைக்கும் தகவல். அப்படியொரு வரலாற்று நினைவு கூறலை அல்ஜீரியப் போராட்டம் - The Battle Of Algiers சினிமாவும் கூறுகிறது. வரலாறு கற்றுத்தரும் அத்தனை பாடங்களையும் இந்த சினிமா பதிவு செய்துவிடவில்லை. ஆனால், அல்ஜீரியப் போராட்டத்தின் படிப்பினைகளை இந்த சினிமா படம்பிடித்திருக்கிறது.
பிரான்ஸின் ஆதிக்கத்திலிருக்கிறது அல்ஜீரியா, அடக்குமுறையிலிருந்து தேசத்தை மீட்க FLNஎன்னும் ஆயுதமேந்திய விடுதலைப் போராளிக்குழு இருக்கிறது, இக்குழு தனிநபர் பழிவாங்கலில் இருந்து தாக்குதலைத் துவங்கும் விதமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரிகளைக் கொல்கிறார்கள், பதிலுக்கு ராணுவ அதிகாரியொருவன் அல்ஜீரியர்களின் குடியிருப்பில் வெடிகுண்டை வைக்கிறான், மீண்டும் பழிவாங்கல், பாதுகாப்பு பலப்படுத்தல், பெண்கள் ஆயுதங்களைத் தூக்கிவர மீண்டும் பழிவாங்கல், இந்த பழிவாங்கல் கூட ஒரு விடுதலைப் போராட்டமாகவே வடிவம் பெற, மீண்டும் பலத்த பாதுகாப்பு, பிரெஞ்சுப் பெண்களைப்போல தங்களை அலங்கரித்துக்கொண்டு பிரெஞ்சு மக்கள் புழங்குமிடங்களில் வெடிகுண்டு வைக்கிறார்கள், நிலைமை தலை விரித்தாட, ஒரு கொடக்கண்டன் ராணுவ தளபதியாக வருகிறான், அவனுடைய திட்டமிடல் துவங்குகிறது, மக்களை அமைதியான முறையில் ஒரு வாரம் வேலைநிறுத்தத்திலீடுபட FLN குழு அறிவிக்க, மக்களும் சொல்பேச்சு கேட்கிறார்கள், ஆதிக்கவெறி தலைக்கேறி, வீட்டில் படுத்துக் கொண்டிருக்கும் ஆட்களையும் துப்பாக்கி முனையில் இழுத்து வந்து, ஒரு வார காலம் போராடி, வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வேளையில், FLN குழுவினர் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, நான்கு பேர் மட்டுமே தப்பிக்கிறார்கள், அவர்களும் படிப்படியாக ஒவ்வொருவராக மாட்டுகிறார்கள், இரண்டு வருடங்கள் காயடிக்கப்பட்ட மக்கள், திடீரென பொங்கியெழுகிறார்கள், ராணுவ ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள், அவர்களின் போராட்டம் சில ஆண்டுகள் நீடிக்க, ஆதிக்கம் அகல்கிறது, சுதந்திரம் பிறக்கிறது. (சுதந்திரமடைவது படத்தில் காட்டப்படுவதில்லை, சொல்லப்படுகிறது)
முற்றுப்புள்ளியில்லாமல், மூச்சுவிடாமல் ஒரு பத்தியிலடங்கிவிடக்கூடிய கதைதான், (மேலே சொன்னதைப் போல) ஆனால், உண்மை வரலாற்றைப் பதிவு செய்த விதத்தில், இந்த சினிமா சொல்லும் பாடம் மகத்தானது. இந்த சினிமா முழு போராட்ட வரலாற்றையும் பதிவு செய்யவில்லை, போராட்டத்தின், போரின் நிகழ்வுகளை மட்டுமெ சொல்கிறது.
ஒரு போராட்ட வடிவம் அடக்கப்படும் போது, போராட்ட வடிவங்கள் மாறுமென்பதைப் போல், அல்ஜீரிய மக்கள் முதலில் அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட, அடக்குமுறைகள் அதிகமானதால், போராட்ட வடிவம் ஆயுதந்தாங்கியதாக மாறியது, அமைப்பு அழிக்கப்பட்டதும் (படத்தில்) மீண்டும் மக்களே தங்கள் கைகளில் போராட்டங்களை எடுத்துக் கொண்டனர். கல்லெறியும் போராட்டமாகவும், ஓலமெழுப்பும் போராட்டமாகவும் மாறியிருக்கிறது. உலகமுழுவதும் அல்ஜீரியப் போராட்டத்துக்காகக் கலகக் குரல்கள் பலராலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஆல்பெர்ட் காம்யூ, ழான் பால் சர்த்தாரினுடைய குரல்கள் முக்கியமானவை. (காம்யூவை அல்ஜீரிய போராளிகள் அவருடைய சில கருத்துக்களால் எதிர்த்தனர்)
இந்த சினிமா பல வகையிலும் நம் கண் முன்னே ஈழப் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. அடக்குமுறை ஏவப்படும் போது, ஆண், பெண், சிறுவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஏவப்படும் போது, எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லோருமே ஆயுதமேந்ததான் செய்வார்கள். அடக்குமுறை எதன் பெயரால் வந்தாலும் சரி, அது நிறத்தாலோ, மதத்தாலோ, கடவுளின் பெயராலோ, ஒடுக்கப்படுபவர்கள் கட்டாயம் எதிர்ப்பார்கள். தங்களிடம் கிடைக்கக் கூடிய அத்தனை ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு வருவார்கள், அது கல்லாகவும் இருக்கலாம், கழுதை சாணியாகவும் இருக்கலாம், அல்லது குலவையிடும் வாயாகவும் இருக்கலாம். ஓலமிட மட்டுமில்ல எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தங்கள் குரலைப் பயண்படுத்துவார்கள் என்பதை இப்படத்தின் இறுதியில் காணலாம்.
கருவிலிருக்கும் குழந்தையின் மீது கூட அடிமை முத்திரை குத்தப்படும் போது வாய் திறக்காத புணிதப் பசு மௌனிகள், ஒரு சிறுவன் ஆயுதமேந்தி போராடும் போது, இவங்கள பாத்தீங்களா, சின்ன சின்னப் பசங்க கையில் ஆயுதத்தைக் கொடுத்து போராடச்சொல்றாங்க, இவா எல்லாம் போராளிகளான்னு வாய்கிழிய கத்த வந்துடுவாங்க. அப்படி ஒரு காட்சியாக, வேலை நிறுத்தத்தை ஒடுக்க ராணுவம் வீடுகளுக்குள் புகுந்து ஆட்களை இழுத்து வரும்போது, ஒரு பிஞ்சுக்குழந்தை மலங்க மலங்க விழிக்கும், ஆதரவற்று நிற்கும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ராணுவ அதிகாரி ஒருவர், மக்களே பயப்படாதிர்கள், அந்த தீவிரவாத குழுவிடமிருந்து உங்களைக் காக்கவே பரம்பிதா உருவத்தில் நாங்கள் வந்திருக்கிறோம், புத்தம் சரணம் கச்சாமி, யுத்தம் சரணம் கச்சாமி, ரத்தம் சரணம் கச்சாமிஎன்று மைக்கில் ஓலமிட்டு கொண்டிருக்க, ஒரு சிறுவன் அவர்களுக்குத் தெரியாமல், அந்த மைக்கை எடுத்துச் சென்று இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறான், இயக்கத்தின் காய் நகர்த்தல்களில் அவனுடைய பங்கும் இருக்கிறது. படத்தின் இறுதி வரையிலும், அந்த சிறுவன் வந்து கொண்டிருப்பான்.
இயக்கம் அழிந்த பிறகும் தன்னெழுச்சியாக மக்கள் சில காலத்திற்குப் பிறகு கொதித்தெழும் போது, பிரெஞ்சு ராணுவம் தன் ஆதிக்கத்துக்கு சாவு மணியடித்துக் கொண்டு கிளம்பும். நம்பிக்கை கிளை துளிர்க்கிறது.
தான் தோற்ற போர்களிலெல்லாம், வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ளும், அமெரிக்க ஹாலிவுட் சினிமாக்களுக்கு மத்தியில், மக்கள் போராட்டத்தை காட்டும் இத்தகைய சினிமாக்கள் பாராட்டப் பட வேண்டியவை.