9.2.11

தனித் தமிழ் பெயர் வைத்தது தவறா?

ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது, இது இன்று நேற்றைய பழக்கம் இல்லை, பாரி, ஓரி, ஆய், அண்டிரன் என்ற சங்கப் பெயர்களெல்லாம் மங்கிப் போய் ராஜராஜ சோழன்களும், விஜயாலய சோழன்களும் தோன்றிய சங்கம் மருவிய காலத்திலிருந்து நீண்டு வரும் பழக்கம். அப்போதே தமிழனின் பெயருடன் வடமொழிக் கலப்பு கூடி குடும்பம் நடத்தத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்தே தமிழ்ப் பெயர்கள் தற்காலிகமாய் போடப்பட்ட வெளிச்ச விளக்குகளால் மங்கிப் போயிருந்தன.
இந்நிலை மாறத் துவங்கியது, மறைமலையடிகள், திருவிக, தேவநேயப் பாவானார் (இன்னும் சொல்லிக்கொண்டே போனால் பட்டியல் நீண்டுவிடும்) போன்ற தனித்தமிழ் ஆர்வலர்கள், நீதிக் கட்சியின் ஆட்சிக்குப் பிறகான சமூக முன்னேற்றங்கள், சுய மரியாதை இயக்கம் ஆகியவை இந்த சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களுக்குப் பிறகே தூயத்தமிழ் பெயர்கள் தமிழ்நாட்டில் உலாவரத் தொடங்கின. இது திராவிட இயக்கங்களின் துவக்கக் காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள். கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் தமிழ் பெயர்களாகவே உலாவரத் துவங்கின. வீதியெங்கும் தேமதுரத் தமிழோசை முழங்கிய காலம் அது. சாக்கடை உடைப்பெடுத்து சகடைத் தண்ணீர் தெருவெங்கும் நாற்றமெடுக்கத் துவங்கியது, திராவிட அரசியலின் இன்றைய சீரழிவுக் காலத்தினுடை துவக்கத்தில்.
திலகரின் காங்கிரசுக்கும், காந்தியின் காங்கிரசுக்கும், நேருவின் காங்கிரசுக்கும், இந்திராவின் காங்கிரசுக்கும் இன்றைய சோனியாவின் காங்கிரசுக்கும் வித்தியாசம் உணர்ந்து பேசும் அறிவுஜீவிகள், திராவிட அரசியல் என்றாலே பெரியாரின் தாடி மயிரை இழுத்துத் தொங்கத் துடிக்கின்றார்கள். நான் இங்கு அப்படி குறிப்பிடாமல் திராவிட இயக்கங்களின் துவக்கக் காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், இன்றைய சீரழிவையும் மட்டுமே குறிப்பிடுகிறேன்.
என் பெயர், நான் யார் என்பதை இந்த உலகுக்குச் சொல்வதாக இருக்க வேண்டும். பெயர் என்பதை எனக்கான வெறும் அடையாளமாக நான் பார்க்க வில்லை, என் இனம் எது என்பதையும், என் மொழி எது என்பதையும், என் அரசியலெது என்பதையும் சொல்வதாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய இன்றைய கொள்கை, இதனால், நான் இனவெறியன், மொழி வெறியன் என்று அழைக்கப்பட்டால், நான் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன். என் பெயர் அப்படிப்பட்டதுதான். என் இனத்தைக் குறிக்கும் அடையாளம் என் பெயரில் இருக்கிறது, என் மொழியைச் சுட்டும் அடையாளமும் என் பெயரில் இருக்கிறது, என் அரசியலைச் சுட்டும் அடையாளமும் என் பெயரில் இருக்கிறது. என் பெயரைக் கேட்கும் போது ஒருவரின் முகத்தில் ஓடும் வெறுப்பின் ரேகையின் வாசம் என்னைத் தீண்டவேச் செய்கிறது, களிப்பின் ரேகை என்னைத் திளைக்கவும் செய்கிறது.
ஆனால், ஒவ்வொரு அரசு ஆவணங்களிலும் என் பெயர் கடித்துக் குதறப்படும் போது, அதற்குக் காரணமானவர்களையெல்லாம் கழுத்திலேயே கடித்துக் குதறலாமா எனத் தோன்றுமளவிற்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக என் பெயர் எல்லா ஆவணங்களிலும் கொலை செய்யப்பட்டிருக்கிறது.
நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வேறு ஒரு பள்ளிக்கு மாற்றப்பட்ட போது வாங்கிய மாற்றுச் சான்றிதழில் முதல் தவறு வந்தது. பிறகு பத்தாம் வகுப்பில் தேர்வுத்துறைக்கு அனுப்பிய மாணவர்கள் பட்டியலில் ஆங்கிலப் பெயரில் ஒரு h ஐ முழுங்கினார்கள். பின்னால் பனிரெண்டாம் வகுப்பில் ஒரு முறை தவறு நிகழ இருந்த போது துவக்கத்திலேயே அதைச் சரி செய்துவிட்டேன். மூன்றாண்டுகளுக்குப் பிறகு கல்லூரியிலிருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்ற போது மீண்டும் சொதப்பினார்கள், நீண்ட அலைச்சலுக்குப் பிறகு அதைச் சரி செய்தேன், பின்னர் தொடர்ச்சியாக இந்த இரண்டு ஆண்டுகளாக நான் எதற்காக விண்ணப்பித்தாலும் என் பெயர் தவறாக வருவது வாடிக்கையாகவும், பின் திருத்தத்துக்காக நான் அலைவதும் சூரியன் உதிப்பதைப் போல வாடிக்கையாகிவிட்டது. PAN கார்டில் தவறு செய்தார்கள், குடும்ப உறுப்பினர் அட்டையில் தவறு செய்தார்கள், வாக்காளர் அடையாள அட்டையில் தவறு செய்தார்கள், பத்திரங்களிலும் தவறு செய்தார்கள்.
வாக்காளர் அடையாள அட்டையில் நிகழ்ந்த தவறு உண்மையிலேயே என்னை அதிகளவு கோபமேற்றிய தவறு. இது நாள் வரை என் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போதுதான் தவறு செய்வார்கள், வாக்காளர் அடையாள அட்டையிலோ தமிழிலேயே தவறு செய்தார்கள். ஒரு விண்ணப்பத்திலிருக்கும் பெயரைப் பார்த்து தட்டச்சு செய்வதில் கூடவா இத்தகைய தவறுகளைச் செய்வார்கள்?
இவர்கள், இத்தனைத் தவறுகளுக்கும் ஆளாளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். வழக்கத்துக்கு மாறா ஒரு பெயர் இருந்தாலே இப்படித்தான் சார் ஆகும். நீங்க இப்படி பெயர் வச்சிருக்கீங்க என்ன பன்றது? இந்தக் கேள்வியே என்னை மிகவும் உசுப்பேற்றியது, தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பது என்ன வழக்கத்திற்கு மாறான செயலா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்து போயினும் கைக்கொள்ள வேண்டாம்
என்ற வாசகத்தை என் பாட்டன் எங்கள் வீட்டின் முகப்பிலேயே எழுதி வைத்திருந்தான். தமிழில் பெயர் வைப்பது வழக்கத்திற்கு மாறான செயல் என்றால் இந்த இனத்திற்கென ஒரு மொழி எதற்கு? இந்த இனத்திற்கு சுயமரியாதை எங்கே போயிற்று?
எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
தலைமுறைகள் பலகழித்தோம், குறைகளைந்தோ மில்லை!
தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாடிய அதே பாவேந்தன் தான் இப்படி பாடினான்.
இந்தத் தமிழ்நாட்டில் தமிழ் பெயர்கள் இல்லாது மாண்டு போகட்டும், தமிழும் மாண்டு போகட்டும், தமிழனும் மாண்டு போகட்டும்.