17.9.11

பெரியார் – கலகக் குரல்

“பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ’ன்னா ஆ’வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் எழுப்பப்படுகிறது. இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் பல அரைகுறைகளில் ஒருவனல்ல நான். அந்தக் கிழவனின் சாதனையை அனுபவிக்கும் பல கோடிப்போரில் நானும் ஒருவன். பெரியார் சாதித்ததை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.

என்னுடைய 12 வயதில் ஒரு கவிதையை, என் பாட்டன் என் காது பட வாசித்திருக்கிறார், எனக்கு புரிதல் தொடங்கிய வயதில் அந்தக் கவிதை எவ்வளவு உண்மையென்பதை தன் வாழ்வோடே ஒப்பிட்டு பாடமே நடத்தினார் எனக்கு, அந்த வார்த்தைகள், என் பாட்டனின் ஓட்டுவீட்டின் எதிரேயிருந்த கிராமத்து புளியந்தோப்பின் ஒவ்வொரு மரத்தின் இடையிலும் புகுந்து அந்த தோப்பை விட்டு வெளியேறியது, அவர் இந்த மண்ணிலிருந்து மறைந்த போது. ஆனால், அந்த வார்த்தைகள் என்னுள் புதைந்திருக்கின்றன. அந்தக் கவிதையை என்னுடைய செய்தி சேகரிப்பு தொகுப்பில் சேர்த்து வைத்தேன். இக்கட்டுரையை எழுதும் போது அந்தக் கவிதை இன்னுமிருக்கிறதா என்பதை உறுதி செய்ய புத்தக அலமாரியில் தேடிப்பார்த்தேன், இன்னுமிருக்கிறது. அந்தக் கவிதையை இங்கு தருகிறேன்.
என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்
பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி
வெட்டும் தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.
என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
பிரமணனும் மனுசந்தாங்க.
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.
ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?
இந்தக் கவிதையை எழுதியவர், தோழர் வே.மதிமாறன். ஆடு மேய்க்கும் தொழிலை விட்டு ஆசிரியர் தொழிலுக்குப் புகுந்த என் பாட்டனின் வளர்ச்சிக்குப் பின்னாலிருந்தது அந்த வெள்ளைத் தாடிக் கிழவன் தான். நான் இன்று சுயமரியாதையோடு இருப்பதற்கும் இந்தக் கிழவன் தானே காரணம். நம் ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் பின்னால் அந்தக் கிழவனின் வியர்வை சொட்டியிருக்கிறது என்று ஒரு தோழர் இந்த பதிவில் சொல்லியிருந்தார்.

அந்த வியர்வையின் வாசனையை நுகராதவர்கள், நுகர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் என்ற ஒரு பெரிய கூட்டமே நம் கண் முன்னே இருக்கிறது. இந்தக் கிழவனின் மதிப்பைத் தெரியாத, இந்தக் கிழவனின் சாதனைகளைத் தெரியாத ஒரு இளைய சமுதாயமும் நம் கண் முன்னே இருக்கிறது. இவர்களைப் பொறுத்தவரை இந்தக் கிழவன் கடவுள் மறுப்பை மட்டுமே பேசியவன், கடவுளை மறுத்தவன், கடவுளை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்தவன், பார்ப்பனர்களை எதிர்த்தவன், கடவுள் சிலைகளை உடைத்தவன், கடவுள் படங்களை கொளுத்தியவன், இன்னும் என்ன என்னமோ எதிர்மறையானவையாக மட்டுமே பெரும்பாலானவர்களிடம் கொட்டிக் கிடக்கிறது. இது எதனால்? சிலரிடமிருப்பது அறியாமையால், சிலரிடம் இருப்பது ஊடகங்களாலும், பார்ப்பன ஊடகங்களாலும் அவர் மீது கட்டியமைக்கப்பட்ட பிம்பங்களாலும் தான். இன்று பெரியார் பற்றாளர்களாக இருப்பவர்களில் பலர் முதலில் பெரியார் மீதான வேறு அபிப்ராயம் கொண்டவர்களாகவும், அவரை நெருங்கிய போது அவர் பிரம்மாண்டம் புரிந்தவர்களாகவுமே இருப்பார்கள். இம்மாதிரியான பலரை நான் என் வயதின் காலத்திலேயே பார்த்திருக்கிறேன்.
லொயோலாவில் படித்த காலத்தில் எனக்கு, ஆறுமுகப் பிள்ளை என்பவர் தமிழ் பேராசிரியராக இருந்தார், அவர் வகுப்பு எப்போதும் கலகலப்பாகவும், சில சமயங்களில் பொருள் பொதிந்ததாகவும், பல சமயங்களில் இரு பொருள் பொதிந்ததாகவும் இருந்ததுண்டு. அவரைப் பற்றி அந்த மாதிரியான பிம்பம் மட்டுமே எனக்கிருந்தது. அதற்கடுத்த பருவத்தில் உரையாடல் கலை வகுப்பில் ஒரு நாள் சிறப்பு அழைப்பாளராக எங்களோடு உரையோட அவரை அழைத்திருந்தோம், “…நான் எம்.பில் படிக்கும் போது பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற தலைப்பை ஆய்வுக்காக எனக்கு தந்தார்கள், வே. ஆனைமுத்து அய்யா தொகுத்த பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் நூலைப் பற்றிய ஆய்வுரை தான் அது, அந்த மூன்று தொகுப்பு நூல்களையும் (இரண்டாம் பதிப்பில் இருபது நூல்களாக இந்த ஆண்டு வெளியிடப்பட்டது) படித்த பிறகு எனக்கு பெரியார் மீதிருந்த மதிப்பு கூடியது, அவர் மீது நான் கொண்டிருந்த கண்ணோட்டம் மாறியது, அதன் பிறகு நான் பெரியார் பற்றாளனாக மாறினேன்…” என்றார். எம்.பில் படிக்கும் வரைக்குமே பெரியார் மீதான தவறான கண்ணோட்டத்தோடே அவர் இருந்திருக்கிறார், அதுவும் ஒரு பேராசிரியராக, அதைப்போலவே இன்றும் பலர் இருக்கிறார்கள். பெரியார் மீதிருக்கும் இத்தகைய தவறான கண்ணோட்டங்களை உடைக்க வேண்டியது பெரியார் பற்றாளர்கள் கடமையில்லையா?
அந்தப் பேராசிரியர் பெரியார் பற்றாளராக இருந்தும் அவர் பெயருக்குப்பின்னாலேயே, அசிங்கத்தைச் சுமந்து கொண்டேதான் இருக்கிறார், அவர் பேசிய போதே அவரை நோக்கி இக்கேள்வியை எழுப்ப நான் விரும்பினேன், ஆனால், அவரை சங்கடத்துக்குள்ளாக்க வேண்டாமென அமைதி காத்தேன். அதைத் தவறென்று இரண்டு ஆண்டுகள் கழித்து இன்று உணருகிறேன். இந்தியாவெங்கும் இருக்கும் மக்களைவிட தமிழகத்தில் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயரைப் போட்டுக் கொள்ளும் பழக்கம் இல்லாமலிருந்தது, ஆனால், சமீப காலமாக நரேஷ் அய்யர்களும், ஜனனி அய்யர்களும், சிவலிங்க நாடார்களும் பெருகி வருகிறார்கள், இது இன்றைய நிலையில் ஒரு பேஷனாகவே மாறிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அச்சடிக்கப்படும் ஒவ்வொரு திருமன பத்திரிக்கையிலும் கவுன்டர்களும், முதலியார்களும், செட்டியார்களும் ஏனைய முந்நூத்தி சொச்சம் சாதிக்காரர்களும் நம்மைப் பார்த்து பல்லிளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் இதற்கெல்லாம் என்ன செய்தோம்?
அவரை முரண்பாடுகளின் மூட்டையாக காட்ட, அவரது மேற்கோள்களைக் காட்டுவார்கள், இன்று ஒன்று பேசுவார், அதற்கு அடுத்த நாளே மாற்றிப்பேசுவார் என்று அவரைக் குறையாகக் கூறியவர்களுக்கெல்லாம், அவரே பதிலும் தந்திருக்கிறார்,
நான் அடிக்கடி கொள்கைகளில் மாற்றமடைவதாக சொல்லப்படு கின்றது வாஸ்தவமாக இருக்கலாம். நீங்கள் ஏன் அதை கவனிக்கின்றீர்கள்? ஒரு மனிதன் அவன் பிறந்தது முதல் இன்றுவரை திருடிக்கொண்டே இருக்கின்ற ஒரே நிலைக்காரன் என்று சொல்லப்பட்டால் அவன் மகாயோக் கியனா? என்று கேட்கின்றேன். எந்த மனிதனும் ஒரே நிலைமையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் ஏன் ஆசைப்படுகின்றீர்கள்? அதனால் உங்களுக்கு என்ன லாபம்? மாறுதல் முற்போக்குள்ளதா? பிற்போக் குள்ளதா? அதனால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்பன போன்ற வைகளை கவனிக்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.
இன்றைய தினம் நான் சொல்லுபவைகள் கூட எனக்கு முடிந்த முடிவா என்பது சந்தேகம் தான். அன்றியும் உங்களுக்கு இன்றைய நிலைமையில் கால வர்த்தமானத்தை பொறுத்தவரையில் இவ்வளவுதான் சொல்லலாம் என்று கருதிக்கொண்டு சில விஷயங்களில் அளவாகவே பேசுகின்றேன் என்றும் சொல்லலாம்.
இந்த மாதிரி மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவுக்கும், நாட்டின் முற்போக்குக்கும் ஏற்றார்போல் நடந்து தான் தீரும். எனவே நான் மாறுதலடைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப்படவில்லை. நாளை நான் எப்படி மாறப் போகின்றேன் என்பது எனக்கே தெரியாது. ஆதலால், நான் சொல்வதை கண்மூடித்தனமாய் நம்பாதீர்கள்…”
இது பதில் மட்டுமல்ல, அவர் மீது அவரே நடத்திக் கொண்ட சுயபரிசோதனையும் கூட, இப்படி நேர்மையாக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள எத்தனை பேருக்கு துணிச்சலிருக்கிறது? எத்தனை பேர் இப்படி சுய பரிசோதனை செய்திருக்கிறார்கள், விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு மொழியியல் ஆராய்ச்சியாளருக்கு இணையாக திராவிட மொழிகளை ஒப்பிட்டு அவர் எழுதியுள்ள கட்டுரை ஒரு ஆய்வுக்கட்டுரைக்கு இணையானது. நூற்றாண்டு பழமையான எழுத்து முறையில் ஒரு எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வர வெறும் கடவுள் நம்பிக்கை அற்றவரால் மட்டுமே முடியுமா? அவருடைய இத்தகைய முகங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தம் மட்டுமே பலரும் அறிந்த ஒன்றாக இருக்கும் நிலையில் நாம் இதெற்கெல்லாம் என்ன செய்தோம்
தந்தை பெரியார், வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும்தான் இருந்தாரா? பெண்ணுரிமைக்காக அவர் குரல் கொடுக்கவில்லையா? சமூக நீதித்துறையில் அவர் செய்யாத போராட்டங்களா? வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்துக்காக அவர் மேற்கொள்ளாத முயற்சிகளா? அரசியல் சாசனத்தையே முதல் முறையாக திருத்தி எழுதும் அளவிற்குத்தானே அவர் போராட்டம் இருந்தது. “இந்த அரசியல் சாசனத்தை முதலில் கொளுத்தும் ஆளாக நான் இருப்பேன்என்று பாராளுமன்ற அவையில் முழங்கிய அம்பேத்கரால் கூட செய்ய முடியாத சாதணை அல்லவா பெரியார் செய்தது. இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று முழங்கிய காந்தி குல்லாக்களுக்கு மத்தியில் கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் இருக்கும் அளவிட முடியாத இடைவெளியைச் சுட்டிக்காட்டி இந்தக் கிராமங்கள் ஏன் ஒழிய வேண்டும் என பட்டியலிட்டு விவாதித்த பெரியார், ஒரு சமூக ஆய்வாளர் இல்லையா

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் நூலை ஒரே ஒரு முறை புரட்டிப் பார்த்தாலே ஒரு உண்மை விளங்கும், அது, பெரியார் கடவுள் மறுப்பையும், மதத்தையும் நோக்கி கேள்வி யெழுப்பியவை கொஞ்சமே. அரசியல் துறையிலும், சமுதாயத்துறையிலும், தத்துவங்களிலும், இலக்கியங்களிலும், கடவுள் மறுப்பைக் காட்டிலும் என்னிக்கையில் அதிகமான கட்டுரைகளையும், காத்திரமாகவும், எழுதியிருப்பது விளங்கும். அந்த இருபது தொகுப்பு நூல்களைப் பார்த்ததும் ஒரு நிமிடம் நான் மலைத்துப் போனேன், இத்தனை தகவல்களை இவர் பேசியிருக்கிறார், எழுதியிருக்கிறார், விவாதித்திருக்கிறார். இத்தனை எழுத்துப்பணிகளுக்கும், பேச்சுகளுக்கும் இடையே மூத்திரச்சட்டியோடு பிரச்சாரத்துக்குப் போயிருக்கிறார், போராட்டங்களை நடத்தியிருக்கிறார். ஆனால், இவர் மீது பெரும்பாண்மையினர் கொண்டிருக்கும் இந்த பிம்பம் ஏன்? இவர் மீது ஏன் இந்த பிம்பம் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது?
சமூகநீதிக்கு பெரும் தடையாகவும், சமூக கட்டமைப்புகளில் தீண்டாமைக்கும், அத்தனை தீங்குக்கும் காரணமாயிருக்கும், மதத்தையும், அதன் உட்கூறான சாதியையும், இந்தச் சாதியையும், மதத்தையும் காக்கும், கடவுளைத் தான் சாடினார், இந்த மூன்றையும் கட்டிக்காக்கும் பார்ப்பனர்களையும் தான் அவர் சாடினார். பார்ப்பனர்களின் இடத்தில் செட்டியார்கள் இருந்திருந்தால், செட்டியார்களைச் சாடியிருப்பார், நாடார்களிலிருந்திருந்தால் நாடார்களைச் சாடியிருப்பார், யார் இருந்திருந்தாலும் அவர்களைச் சாடியிருப்பார். இதைத்தானே அவரது எழுத்துக்கள் நமக்கு காட்டுகின்றன.
பெரியார் மீதும், பெரியார் பற்றாளர்கள் மீதும் வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு இந்துக்களை மட்டுமே நீங்கள் குற்றம் சொல்வீர்கள், இந்துக் கடவுளர்களை மட்டுமே நீங்கள் தாக்குவீர்கள், இஸ்லாமியர்களையோ, கிறித்துவர்களையோ நீங்கள் தாக்கமாட்டீர்கள் என்பார்கள், ரஸ்ஸலிடமும், ரிச்சர்டு டாக்கின்ஸிடமும், கிரிஸ்டோபர் ஹிச்சன்ஸிடமும் போய் நீங்கள் ஏன் இந்து மதத்தின் குறைகளையோ, இஸ்லாமிய மதத்தையோச் சுட்டிக் காட்டி புத்தகம் எழுதுவதில்லை கிறித்துவத்தை மட்டும் குறை கூறுகிறீர்கள் என்றும் இவர்கள் கேட்டுவிடுவார்களோ? துரான் டர்ஸனிடமும், உஸாமா அல்ஷாபிடமும் சென்று ஏன் இஸ்லாமைப் பற்றி மட்டும் விமர்சிக்கிறீர்கள், இந்து மதத்தையோ, கிறித்துவ மதத்தையோ குற்றம் சாட்டுவதில்லை என்று கேட்பார்களோ? (நான் குறிப்பிட்டிருக்கும் பலரில் சிலர் இன்று உயிருடன் இல்லை). அடிப்படையான எதை தாக்க வேண்டுமோ அதை நோக்கியே பெரியார் கேள்வியெழுப்பினார். ஏன் இஸ்லாத்தை நோண்ட வில்லை, கிறித்துவத்தை ஆட்டவில்லை, போன்ற கேள்விகளின் பின்னாலிருப்பது குழப்பும் நோக்கமும், விவாதத்தைத் திசை திருப்பவும் செய்யும் முயற்சிகளல்லாது வேறில்லை.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்றுதானே அவர் சொன்னார், மகா விஷ்னுவும் இல்லை, சிவனுவும் இல்லை, இராமனும் இல்லை என்ற போது, அவர் எல்லாம் வல்ல பரம்பொருளையோ, பரமபிதாவையோ, பரிசுத்த ஆவியையோ ஏற்றுக் கொள்ளவில்லையே. சீனாக்காரன் வந்தால் பறப்பட்டமும் பள்ளுப்பட்டமும் ஒழிந்து போகுமானால், அவன் வந்துவிட்டு போகட்டும் என்று சொன்னவர் தானே பெரியார். அதே கருத்தில் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சொன்னாரேயொழிய ஐந்து வேளை தொழுகை செய்து, ஹஜ் பயணம் மேற்கொண்டு பரம் பொருளை வணங்கச் சொல்லவில்லை. இஸ்லாத்திற்குப் போனப்பின்னாலும் இதே சாதி இழிவுப் பட்டம் நம்மை ஒட்டியிருக்குமானால், அதை விட்டும் விலகவேச் சொல்லியிருப்பார், அவருடைய எழுத்துக்கள் நமக்கு இதைத் தானேச் சொல்கிறது.
பெரியாரின் கடவுள் மறுப்பு பிம்பத்தை இன்றும் பொது மக்கள் முன் வைக்கும் ஊடகங்கள் வேண்டுமென்றே அவரை தூரத்தில் வைத்திருக்கவே இப்படிச் செய்கின்றனவா? ஏன் அவரது பிற முகங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன? பெரியார் பற்றாளர்களும் பெரியார் வழி வந்தோரும் அவருடைய உண்மையான வாரிசுகளாகிய அவருடைய கொள்கைகளையும் புத்தகங்களையும் ஏன் பரவச் செய்யவில்லை? பெரியார் இறந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகுதான், குடியரசு தொகுப்பு நூல்களும், பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகளும் (மிக விரிவான இரண்டாம் பதிப்பு) தொகுக்கப்பட்டிருக்கிறது. இப்போது தொகுத்திருக்கும் அளகுக்குச் சமமாக தரவுகள் இன்னும் வெளியிடப்படாமல் என்னிடமே இருக்கிறது என்கிறார் வே.ஆனைமுத்து. அவருக்கு அந்த தரவுகளையும் தொகுக்க தடையாயிருப்பவற்றுள் ஒன்று நிதி என்பது எவ்வளவு வேதணைக்குரியது?
எனக்குப்பின் என் நூல்களும் கொள்கைகளுமே வழிகாட்டி
நான் கூட்டங்களில் எல்லாம் சொல்லிக் கொண்டுதான் வருகிறேன். எனக்குப்பிறகு எனது புத்தகங்கள் தான் உங்களுக்கு வழிகாட்டி என்று…”
அவர் நமக்கு, தனக்கு பின்னால் என்ன என்பதை தெளிவாகவே விட்டுப் போயிருக்கிறார். ஆனால், நாம் என்ன செய்தோம்?
பெரியார், நமக்கான தளத்தை விட்டுப் போயிருக்கிறார், நமக்கான சித்தாந்த வலுவை தந்திருக்கிறார். அவர் சாதித்துவிட்டுப் போன விஷயங்கள் இன்று மீண்டும் துளிர் விட ஆரம்பித்து இந்துத்துவமாய் வளர்ந்து இருக்கிறதே. உலகமயமாக்கலின் விளைவாக முதலாளித்துவம் மீண்டும் வந்து இடஒதுக்கீட்டை கேள்விக்குரியதாக்கியிருக்கிறதே. நம்மை விட்டு பற, பள்ளுப் பட்டம் போய்விடவில்லை, அவர் காலத்தை விட, அதிகாரங்கள் இன்று மத்தியில் அதிகமாய் குவிக்கப்பட்டு, மொத்தமாய் நம் பல் பிடுங்கப்பட்டிருக்கிறதே. போராட்டத்துக்கான காரணங்கள் இருக்கின்றன. நாம் போராடத்தான் தயாராகயில்லை. பெரியார் இருந்த போது, அவர் தலைமையில் ஒரு போராட்டம் என்றால் தமிழகம் திரளவில்லையா? இன்று ஈழத்தில் அத்தனை உயிர் போகும் போதும் நாம் தனித்தனிக் குழுக்களாகத் தானே இருந்தோம். நமக்கான தலைவன் இல்லாமல் நாம் தடுமாறுகிறோமா? நம் தலைவன், அவனுக்குப் பின்னால் நமக்கான வழிகாட்டியாக தன் கொள்கைகளையும், புத்தகங்களையும் விட்டுச் சென்றிருக்கிறான்.
நடைமுறையின் பாதையில் தத்துவ ஒளி வீசாவிட்டால் வெற்றியில்லை. பாதை வெற்றிடமாகவே இருக்கிறது, கையில் ஒளியும் இருக்கிறது. பயணிக்க பயணத்தைத் தொடங்க நாம் தயங்கிக் கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார் பிறந்தநாள்

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ தங்களுக்கு ஏற்றபடி இந்த உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். இந்த உலகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் இத்தகைய முரண்பட்ட மனிதர்களின் முயற்சியிலேயே அடங்கியிருக்கிறது.
அத்தகைய முரண்பட்ட மனிதர் பெரியாரின் பிறந்த தினம் இன்று. அவரின் ஒவ்வொரு பிறந்த நாளையும் பெரியார் காலத்தில் எழுச்சி விழாக்களாக கொண்டாடிய தலைமுறை இங்கு இருக்கிறது. ஆனால், இன்று, இந்த தலைமுறைக்கு, பெரியாரின் தேவை எப்படிப் பார்க்கப்படுகிறது? முகவரி சொல்லும் அடையாளக் குறிப்புக்காக இவரின் சிலைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுமட்டும் தான் இவரின் இன்றைய தேவையா, பயனா?
வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்(reservation), வகுப்புவாரி உரிமை என்று பெரியார் முழங்கிய போதெல்லாம், அமைதியாக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவர்களெல்லாம், இடஒதுக்கீடாய் குறிக்கி, அதைச் சிறுமைப்படுத்தி, கேலி பேசிக் கொன்டிருக்கும் காலத்தில் பெரியாரின் தேவை இல்லையா? அதைத் தன்னுடைய உரிமையாக உணராத ஒரு தலைமுறையை நீ ஒதுக்கீட்டில் வந்தவன்தானே என்று “இந்திய உயர் கல்வி நிறுவனங்கள்” ஒலிக்கும் போது அது என்னுடைய உரிமை என்று மறுத்துக் குரல் எழுப்பத் வலுவில்லாமல் தூக்குக்கயிற்றைத் தழுவும் இளைஞர்களுக்கு பெரியாரின் தேவை இருக்கிறது. அதை உரிமை என்பதை உணர்ந்தவன் தன் எதிர்ப்பை அங்கு கட்டாயம் பதிவு செய்வான்.
நிலாவுக்கு இந்தியாவிலிருந்து எத்தனை பேரை அனுப்புகிறீர்கள் என்று மேதகு அமெரிக்க அதிபர் கேட்க இந்திய பிரதமர் பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து 3, தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து 2 பேர், ……….. என்று பட்டியலிடுகிறாராம். அதற்கு அமெரிக்க அதிபர், நீங்க இன்னுமாடா திருந்தலை என்று கேலியாக கேட்கிறாராம். இது குறுஞ்செய்திகளிலும் மின்னஞ்சல்களிலும் வகுப்புவாரி உரிமையை (இடஒதுக்கீட்டை) கேலி பேசி வந்தது.
இத்தகையக் கேலிக்குரல்களை ஒலிப்பவர்களில் பலருக்கும் தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத தகவல் , இத்தகைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு அமெரிக்காவில் பெயர் Affirmative action, இங்கிலாந்தில் பெயர்  positive discrimination, கணடாவில் employment equity. இன்னும் பட்டியலிட்டுக் கொண்டேபோகலாம். இடஒதுக்கீடு இந்தியாவின் சாபக்கேடு என்று கூவிடும் குரல்களுக்கு இதையெல்லாம் காண்பதற்கு கண்ணில்லை. அவர்களைப் பொறுத்தவரை இடஒதுக்கீடு கூடாது.
இத்தகைய கேலிச் செய்திகளைக் கூட அறிவின்மை என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், குதர்க்க யுக்தியோடு இப்படி பேசும் குரல்களை மறுக்க வேண்டிய கட்டாயம் அவசியமானது.
நேர்மையாக சொல்லவேண்டுமென்றால் இன்று பிராமணர்கள் முதல்வராகலாம், உலகநாயகன் ஆகலாம், மருத்துவர் இஞ்சினியர்தான் ஆக முடியாது # இடஒதுக்கீடு
http://twitter.com/#!/thoatta/status/112931312842719232
இவர்களுக்கெல்லாம், இது சலுகையல்ல, உரிமை என்பதை உணர வைக்க வேண்டிய தேவைக்காவது பெரியாரியத்தின் இருப்பு  அவசியமாகிறது.