17.9.11

தந்தை பெரியார் பிறந்தநாள்

கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
பெரும்பாலானவர்கள் இந்த உலகத்துக்கு தகுந்த படி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால், சிலரோ தங்களுக்கு ஏற்றபடி இந்த உலகத்தை மாற்றியமைக்க முயற்சிக்கிறார்கள். இந்த உலகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றமும் இத்தகைய முரண்பட்ட மனிதர்களின் முயற்சியிலேயே அடங்கியிருக்கிறது.
அத்தகைய முரண்பட்ட மனிதர் பெரியாரின் பிறந்த தினம் இன்று. அவரின் ஒவ்வொரு பிறந்த நாளையும் பெரியார் காலத்தில் எழுச்சி விழாக்களாக கொண்டாடிய தலைமுறை இங்கு இருக்கிறது. ஆனால், இன்று, இந்த தலைமுறைக்கு, பெரியாரின் தேவை எப்படிப் பார்க்கப்படுகிறது? முகவரி சொல்லும் அடையாளக் குறிப்புக்காக இவரின் சிலைகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இதுமட்டும் தான் இவரின் இன்றைய தேவையா, பயனா?
வகுப்பு வாரி பிரதிநிதித்துவம்(reservation), வகுப்புவாரி உரிமை என்று பெரியார் முழங்கிய போதெல்லாம், அமைதியாக வாலைச் சுருட்டிக் கொண்டிருந்தவர்களெல்லாம், இடஒதுக்கீடாய் குறிக்கி, அதைச் சிறுமைப்படுத்தி, கேலி பேசிக் கொன்டிருக்கும் காலத்தில் பெரியாரின் தேவை இல்லையா? அதைத் தன்னுடைய உரிமையாக உணராத ஒரு தலைமுறையை நீ ஒதுக்கீட்டில் வந்தவன்தானே என்று “இந்திய உயர் கல்வி நிறுவனங்கள்” ஒலிக்கும் போது அது என்னுடைய உரிமை என்று மறுத்துக் குரல் எழுப்பத் வலுவில்லாமல் தூக்குக்கயிற்றைத் தழுவும் இளைஞர்களுக்கு பெரியாரின் தேவை இருக்கிறது. அதை உரிமை என்பதை உணர்ந்தவன் தன் எதிர்ப்பை அங்கு கட்டாயம் பதிவு செய்வான்.
நிலாவுக்கு இந்தியாவிலிருந்து எத்தனை பேரை அனுப்புகிறீர்கள் என்று மேதகு அமெரிக்க அதிபர் கேட்க இந்திய பிரதமர் பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து 3, தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து 2 பேர், ……….. என்று பட்டியலிடுகிறாராம். அதற்கு அமெரிக்க அதிபர், நீங்க இன்னுமாடா திருந்தலை என்று கேலியாக கேட்கிறாராம். இது குறுஞ்செய்திகளிலும் மின்னஞ்சல்களிலும் வகுப்புவாரி உரிமையை (இடஒதுக்கீட்டை) கேலி பேசி வந்தது.
இத்தகையக் கேலிக்குரல்களை ஒலிப்பவர்களில் பலருக்கும் தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத தகவல் , இத்தகைய வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு அமெரிக்காவில் பெயர் Affirmative action, இங்கிலாந்தில் பெயர்  positive discrimination, கணடாவில் employment equity. இன்னும் பட்டியலிட்டுக் கொண்டேபோகலாம். இடஒதுக்கீடு இந்தியாவின் சாபக்கேடு என்று கூவிடும் குரல்களுக்கு இதையெல்லாம் காண்பதற்கு கண்ணில்லை. அவர்களைப் பொறுத்தவரை இடஒதுக்கீடு கூடாது.
இத்தகைய கேலிச் செய்திகளைக் கூட அறிவின்மை என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், குதர்க்க யுக்தியோடு இப்படி பேசும் குரல்களை மறுக்க வேண்டிய கட்டாயம் அவசியமானது.
நேர்மையாக சொல்லவேண்டுமென்றால் இன்று பிராமணர்கள் முதல்வராகலாம், உலகநாயகன் ஆகலாம், மருத்துவர் இஞ்சினியர்தான் ஆக முடியாது # இடஒதுக்கீடு
http://twitter.com/#!/thoatta/status/112931312842719232
இவர்களுக்கெல்லாம், இது சலுகையல்ல, உரிமை என்பதை உணர வைக்க வேண்டிய தேவைக்காவது பெரியாரியத்தின் இருப்பு  அவசியமாகிறது.