6.3.12

LE GRAND VOYAGE – உறவின் பெரும் பயணம்

உறவுகளுக்கும், பயணங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இரண்டிலும் துணையைப் பொறுத்தே அது சிறப்பாய் அமைவதோ, சீரழிந்து போவதோ இருக்கும். அப்படி, சரியாக அமையாத தந்தை-மகன் உறவும், அவர்களின் நீண்ட பயணமும் தான் LE GRAND VOYAGE திரைப்படத்தின் கதை. சில பயண அனுபவங்கள் தரும் படிப்பினைகள் வாழ்நாள் முழுதும் வருபவை, சிறு வயதில் நண்பன் அடித்த கல்லின் வடு நீங்காமல் உடலில் எங்கோ இருந்துகொண்டு அந்த நண்பனை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதைப் போல. அவர்களின் மொழியை அறியாத, அந்தப் பிரதேசங்களை கண்டிராத, அந்தக் கலாச்சாரத்தை வாழ்ந்திராத, அந்த உணர்வுகளை புரிந்திராத, அந்த உறவைப் பெற்றிராத எனக்கும் அந்த உணர்வை தந்த சிறந்த படைப்பு இந்தப் படம்.

சில ஆயிரம் ஆண்டுகளாகவே இது தந்தை வழிச் சமூகமாக இருந்து தொலைத்ததாலோ என்னவோ, தந்தை மகன் உறவையும், உறவுச்சிக்கலையும் அடிப்படையாய் வைத்து புனையப்பட்ட பல்லாயிரம் கதைகள் உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறது. கிரேக்க பழங்கதைகளில் யுரேனசு-க்ரோனசு-சீயசு கதை, மூன்று தலைமுறை தந்தை-மகன் உறவுச்சிக்கலைப் பற்றியதுதான். யயாதி-யது என்று நம்மிடையே அந்தக் காலக் கதையிலிருந்து புத்தனாவது சுலபம் என்று இன்றைய கதைகள் வரையிலும் இச்சிக்கல் சரடாக பின்னப்பட்டு வரலாறு முழுதும் நீண்டு வந்துகொண்டே தானிருக்கிறது. தாயிடம் மகனின் பாசத்தைப் பிழிந்து சாறெடுத்த கதைகளும் ஏராளமாய் நம் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டுதானிருக்கிறது. காளிகளும், அம்மன்களும் பெருமளவில் விரவியிருப்பதால் இது சாத்தியமாயிருக்கலாம் அல்லது சிவனில் பாதியை சக்திக்கு வழங்கியிருப்பதால் வந்த விளைவாகவும் இருக்கலாம். ஆனால், நம் வட்டாரம் தவிர்த்து ஒட்டு மொத்த உலகுக்கும் ஒரே ஒரு மேரி மாதவே இருக்கிறாள். மும்மைத்துவமும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியையே பேசுகிறது.
இரு வேறு கலாச்சாரங்களை, வெவ்வேறு மொழிகளை, வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரு மனிதர்களையும் இணைக்கும் புள்ளிகள் தந்தையும் மகனும் என்ற உறவும், நீண்ட பயணமும் தான்.
மார்க்கத்தின் நெறி வழுவாத தந்தை, புனிதப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார், “புனிதப் பயணம், முடிந்தளவுக்கு சொகுசில்லாததாக இருக்கவேண்டும்” என்ற தந்தைக்கு மகிழுந்தை ஓட்டிச் செல்ல வேண்டிய மூத்த மகனால், அப்பணியை நிறைவேற்ற முடியாமல் போக, இளையவன் அப்பணியை செய்ய வற்புறுத்தப்படுகிறான். இளையவனோ தான் வாழும் கலாச்சாரத்தின் தாக்கத்தால், மார்க்க நெறிகளை இழந்து, தன் மூதாதையாரின் மொழியை பேசவும் தெரியாத மேற்கத்தியக் கலாச்சார பாதிப்பு கொண்ட மதமிழந்தவனாகத்தான் தந்தையால் பார்க்கப்படுகிறான். அவனுடைய பிரெஞ்சுக் காதலியைப் பற்றிய கோபமும் அவருக்கு இருக்கிறது. அவனோ தந்தையை நவீனத்தோடு ஒத்துப்போகாத, மதத்தைப் பிடித்துக்கொண்டு வாழ்கிற வறட்டு கிழவனாகப் பார்க்கிறான். நேரெதிரான குணங்களைக் கொண்ட, உறவுச் சிக்கலையுடைய இருவரும் சில ஆயிரம் கிலோ மீட்டர்களை ஒன்றாக பயணிக்கிறார்கள்.
வழக்கமான பயணத் திரைப்படங்களைப் போலவே வழியெங்கும் பலவிதமான மனிதர்கள் வந்துபோகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தோடும், ஒவ்வொரு படிப்பினையைத் தந்து போகிறார்கள். மௌனத்தின் குறியீடாய் பின்தொடர்ந்து வரும் அந்த மூதாட்டி. சாத்தானின் குறீயிடாய், சுங்க அதிகாரிகளிடம் சிக்கும் போது காப்பாற்றும் உள்ளூர் வாசி, மகனைப் போலவே மேற்கத்தியக் கலாச்சாரத்தை தனதாக்கிக் கொண்டவன். அதற்காகவே, மகனால் ரசிக்கப்படுகிறார், தந்தையால் வெறுக்கப்படுகிறான். உதவி கேட்கும் ஏழைப் பெண். இவர்களைப் போலவே புனிதப் பயணம் மேற்கொள்ளும் இன்னும் சில குழுக்கள் என பலர் வந்துபோகிறார்கள்.
தந்தை-மகன் உறவுச் சிக்கல்களைப் பற்றிப் பேசும் பல படங்களைப் போலவே தான் இப்படமும் இருக்கிறது. இருவருக்குமான தலைமுறை இடைவெளி தலைவிரித்தாடுகிறது. மகனின் வயதுக்கேயுரிய காதலை தந்தை எதிர்க்கிறார். நவீனத்தில் திளைத்திருக்கும் மகனுடைய அலைபேசியை அவனுடைய உறக்கத்தின் போது தூக்கிக் குப்பையில் வீசுகிறார். மதக்கடமைகளிலும் தந்தை தீவிரமானவராகவும், மகன் மதமற்றவனாகவும் இருக்கிறார். ஒருவரை மற்றொருவர் வெறுக்கிறார், இடையில் ஒருவர், கோபித்துக்கொண்டு பயணத்தை விட்டு பாதியில் விலகுவதும், சமாதானமாகி மீண்டும் தொடர்கிறார். இப்படி, இருதளங்களிலும் இந்தப் படம் வழமையானதாகவே இருந்தாலும், இயக்குனரின் திரை மொழி இதை சிறப்பானதாக மாற்றுகிறது.
மகன் பேசும் மொழியைத் தன்னால் பேச முடியும் என்றாலும், அவனிடம் அவர் பேசும் மொழி மௌனம்தான். அதைத் தாண்டி அவர் இந்தப் பயணத்தை தான் ஏன் சாலை மார்க்கமாகத் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணமும், புனிதப் பயணம் மேற்கொண்ட தன் தந்தையை எதிர்பார்த்து காத்து நின்ற தருணங்களையும் விளக்குவதுதான், அதைத்தாண்டி அவர் பேசுவதெல்லாம் ‘இன்றிரவு இங்கே தங்கலாம்’ என்பதும் ‘வாகனத்தை ஒழுங்காகச் செலுத்து’ என்பதும் தான். மகனோ, தன் தந்தை பேசும் மொழியை புரிந்து கொள்ளாதவனாய் கூட்டத்திலிருப்பவர்களை வேடிக்கைப் பார்க்கிறான். மொழி தெரியாத இன்னொரு பிரதேசத்தில் வாழ்வது என்பது வேறு. அப்படிப்பட்ட சூழலில் அந்த மொழியைப் பேசிக்கொன்டிருப்பவர்களில் தன் தந்தையும் ஒருவர் என்றால், அந்த மகன் எந்த மனநிலையில் இருப்பான்.
தன் மதத்தை இழந்தவனாகவும், மொழியை இழந்தவனாகவும் வாழும் மகனை தந்தை நொந்து கொள்வதைப் போலவே. உலக அறிவற்றவராக இருக்கும் தன் தந்தையை மகனும் நொந்து கொள்கிறான். எல்லாம் தெரிந்தவரைப் போல, வழி சொல்லி தவறான பாதையில் அழைத்துச் சென்றதற்காக நேரடியாகவே அறிவற்றவர் எனத் திட்டுகிறான். தன் மூலமாய் இந்த உலகுக்கு வந்த, தன் விரல் பிடித்து நடந்த, தன்னைவிட அதிக அறிவை அவன் பெற வேன்டுமென்று நினைத்த தன்னை, தன் மகனே அறிவற்றவன் எனத் திட்டும் போது அவரின் மனநிலை என்னவாக இருக்கும். இரந்து வாழும் நிலையிலுள்ள ஒரு பெண்ணின் முன் தன்னை அடித்ததற்காக மகன் தந்தையை வெறுக்கிறான். மகனின் பொறுப்பற்ற தன்மையைக் கண்டு தந்தை வெறுப்படைகிறார். இப்படி இருவரும் ஒருவர் மாற்றி ஒருவரை மனம் நோகச் செய்தாலும், வெறுத்தாலும் இருவருக்கும் மற்றவர் மீதிருக்கும் அன்பை தேடி அடைவதுதான் பெரும் பயணமோ?
தந்தைகள் மகன்களை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்துபவர்களாக மட்டுமல்ல, இந்த உலகையும் மகன்களுக்கு அறிமுகப்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். தோல்பாவைக் கூத்தில் பாவையும் அதன் கயிறும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை, பாவையின் பிம்பத்தை மட்டுமே நாம் பார்ப்பதைப் போல, தந்தைகள் மறைமுகமாகவே இந்த உலகை கற்பிக்கிறார்கள். மதமிழந்த மகனுக்கு நெறிதவறாமல் மதத்தை காக்கும் தந்தை, சிற்றின்பங்களைத் தவிர்த்து உருவமற்றை ஏக இறைவனை பெரும்பயணத்தில் தரிசிக்கும் முறையைப் போதிக்கிறார். மிலன், துருக்கி, வெனிசு போன்ற நகரங்களைக் கடக்கும் போது, மகன் அந்த இடங்களை சுற்றிப்பார்க்க விரும்பும் போது நாம் சென்றடைய வேண்டியது மெக்காவிற்குத்தான், நாம் சுற்றுலாப் பயணிகள் அல்ல, புனிதப் பயணிகள் என்று வகுப்பெடுக்கிறார். இப்படி எதிரெதிர் திசைகளில் விலகி நிற்கும் தந்தையும் மகனும் ஒன்றினையும் ஏதோ ஒரு புள்ளியை நோக்கி பயணம் சென்று கொண்டேயிருக்கிறது.
உலகம் முழுக்க புனித தலங்களில் எல்லாம் ஒரேமாதிரிதான் இருக்கின்றன, கூட்டமும் நெரிசலுமாய். ‘கூடிய கூட்டங்கள் கடலா கடலலையா’ என்ற வரிகள் முருகனுக்கு மட்டுமல்ல கடவுள் என பெயரிடப்பட்ட எல்லா உருவத்துக்கும், உருவமற்றதற்கும் கூட பொருந்தும் போலிருக்கிறது. மெக்கா நகரை ஒரு திரைப்படத்திற்காக இவ்வளவு நேரம் படம்பிடித்தது இதில்தானாம். இயக்குனர் Ismael Ferroukhiயின்  முதல் முழுநீளத் திரைப்படம் இதுதான். அவரும் படத்தில் வரும் தந்தையைப் போலவே மொராக்காவில் பிறந்து பிரான்சில் வாழ்ந்தவர். மத்திய கிழக்கில் வாழும் இசுலாமியர்களை, அவர்களது கலாச்சாரத்தைப் பேசும் உலகப்படங்கள் அங்கிருந்து வந்தவையாக இருந்த நிலையில், மேற்குலகில் வாழும் இசுலாமியர்களின் கலாச்சாரத்தை பதிவு செய்பவர்களில் முதன்மையானவராக இவர் திகழ்கிறார்கள்.