Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

19.9.09

இது பெரியாரின் வெற்றி

தந்தை பெரியார் அவர்கள் – பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது – அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்,
தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளியிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம் - என்று கண்களில் நீர் பனிக்க – துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார்.

2006ல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மளமளவென்ற பெரியார் கொள்கைகள் பலவற்றை – திராவிடர் இயக்கக் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி வைப்பதில் தீவிரம் காட்டினார் கலைஞர். அதனையொட்டி - பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக – அவர் காலத்திலேயே நிறைவேற்றப்படாமல் போய்விட்ட – அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது இறுதி ஆசையை சட்டமாக்கினார்.
சட்டமாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர் திருவண்ணாமலை, பழநி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்துத் தந்தார். இந்தப் பள்ளிகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டினர்.
இன்று தமிழகத்தின் பல்வேறு கோயில் களிலும் அர்ச்சகர்களாக இருக்கும் எத்தனை பேருக்கு அர்ச்சனைக்குரிய மந்திரங்கள் முழுமையாகத் தெரியும் என்பது சந்தேகத்துக் குரியதே! எத்தனை பேர் முறையாக இதற்காக சிறந்த குருக்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கேள்விக்குரியதே. ஆனால் - கலைஞர் அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், கிரந்தம், திருக்குறள், பன்னிரு திருமறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை கற்பிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது!

ஒரு சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகமுடியும் என்ற உயர்சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் அர்ச்சகர்கள் ஆனவர்கள், மன்னனுக்குப் பிறகு அவரது மகன் மன்னன் ஆவது போல – பரம்பரை பாத்தியதையின் பெயரால் – முறையான பயிற்சியோ – சமயப் பற்றோ – அது தொடர்பான விஷய ஞானமோ இல்லாமலே, ஆட்டமேடிக் அர்ச்சகர்களாக வாய்ப்புப் பெற்று தங்களுக்குத் தெரிந்த அளவில் மந்திரம் சொல்லி அர்ச்சித்து வந்தார்கள். பொதுமக்களும் – தங்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை நடத்தப்படுவதால் கண்ணை மூடிக் கொண்டு – கண்மூடித்தனமாக – நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழிபட்டு வந்தார்கள்.

கலைஞர் அரசு – அர்ச்சகர்களுக்கு உரிய தகுதிகளோடு – திறமை மிக்க அர்ச்சகர்களை உருவாக்கித் தந்திருக்கிறது.
அதுமட்டுமா? இந்தப் பள்ளிகளில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும், ஜோதிடம், இசை, சிற்பக்கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் உள்ளனர் என்று ஆனந்தவிகடன் (25.6.2008) ஏடு பெருமையோடு குறிப்பிடும் அளவுக்கு இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல்துறை வித்தகர்களாகவுமிருக்கிறார்கள்.

இது பெரியாரின் வெற்றி - என்ற தலைப்பிட்டு விகடன் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:-


பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிவிட்டேன் என்று முதல்வர் கருணாநிதி நெகிழ்ச்சியோடு அறிவித்த திட்டம்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். இதையடுத்து தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.

எப்படி இருக்கிறது அர்ச்சகர் பயிற்சி என்று அறிய, முதல் ஆண்டு பயிற்சியை முடித்த திருவண்ணாமலை பள்ளிக்குச் சென்றோம்.
எட்டாம் வகுப்பு பாஸ் செய்திருந்தாலே போதும், இந்தப் பள்ளியில் சேர்ந்து விடலாம். ஆனால், இந்தப் பள்ளியில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும் ஜோதிடம், இசை, சிற்பக் கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த பல வெற்றிகளில் இது முக்கியமானது. இவ்வளவு சிறப்பான திட்டத்தின் பயனை அனுபவிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி. இப்பயிற்சியில் நான் அடிப்படையாகக் கற்றுக் கொண்ட விஷயம் ஒழுக்கம். பூசை செய்யும் முறைகளில் ஆகம விதிகளையும் நெறி முறை களையும் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பேன் என்கிறார் விஜயசங்கர் என்கிற மாணவர்.

இப்படியொரு புரட்சிகரமான மாற்றத்தில் என்னுடைய பங்களிப்பும் சிறிய அளவிலாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனாலேயே நான் படித்துவந்த பி.காம்., படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, இந்தப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருக்கிறேன் என்கிறார் பிரபாகரன்.
நாங்கள் இந்தப் பயிற்சியில் கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், திருக்குறள், பன்னிரு திருமுறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் என பலவற்றைப் படித்துள்ளோம். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் பூசை செய்ய எங்களால் இயலும். என்றாலும், தமிழில் அர்ச்சனை செய்வதையே நான் சிறப்பாகக் கருதுகிறேன் என்கிறார் தர்மேந்திரன்.

இம்மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் மு.சொக்கப்பனும், சைவ ஆகமங்களை எஸ்.எஸ்.ராமகிருஷ்ண னும் போதிக்கின்றனர்!

- என்கிறார் விகடன் கட்டுரையாளர்சுப.தமிழினியன்!அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆனால் – கோயிலின் புனிதம் கெடும் – சாமிக்குப் புரியாது – ஆகமங்களுக்கு அது விரோதமானது என்று இதுவரை கூப்பாடு போட்டு வந்த குறுக்குச்சால் ஓட்டிகள் இனியாவது தங்களது பழைய – துருப்பிடித்த – மூடநம்பிக்கைகளை கைவிட்டு – பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல – என் பதை ஒப்புக் கொண்டு – இந்தப் புதுமையை புரட்சியை வரவேற்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக!

(முரசொலி மற்றூம் விடுதலை இதழில் என்னுடைய கட்டுரையை முழுதுமாக மேற்கோள் காட்டி சின்னக்குத்தூசி எழுதிய கட்டுரை இது.)